Annamalai: முழுவதும் விளம்பரம்! மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை.. விடுதி பெயர் மாற்றம் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

Social Justice Hostels: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி விடுதிகளும் 'சமூக நீதி விடுதிகள்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை, விடுதிகளின் மோசமான நிலை, போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் படி குறைவு எனவும், அரசின் விளம்பர செலவு அதிகம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Annamalai: முழுவதும் விளம்பரம்! மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை.. விடுதி பெயர் மாற்றம் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

சமூக நீதி விடுதிகள் - அண்ணாமலை

Published: 

07 Jul 2025 14:55 PM

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளும் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) இன்று அதாவது 2025 ஜூலை 7ம் தேதி அறிவித்தார். சாதி அடையாளங்கள்/பெயர்களை நிக்கி உள்ளடக்கிய கற்றல் சூழலை மேம்படுத்துவதற்கான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதி கே. சந்துரு ஆணையத்தின் பரிந்துரைகளை குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலிம், பல்வேறு அரசு துறைகளால் நடத்தப்படும் 1,79,568 மாணவர்கள் பயனடையும் 2,739 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளுக்கும் ‘சமூக நீதி விடுதி’ (Social Justice Hostels) என்று பெயரிட அரசாங்கம் இப்போது முடிவு செய்துள்ளது என என்று தெரிவித்தார். இந்தநிலையில், திமுக (DMK) விளம்பரத்துக்கு செலவிடுவதில் 1 சதவீதம் கூட, மாணவர்களுக்கு செலவிடவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை காட்டமான விமர்சனம்:

சமூக நீதி விடுதிகள் என்று மாற்றப்படும் என அறிவித்த சில மணிநேரங்களுக்கு பிறகு, அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமான விமர்சனத்தை பதிவிட்டார். அதில் அவர் வெளியிட்ட முக்கிய கருத்துகள் பின்வருமாறு..

  • தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர் – மாணவ விடுதிகள் தரமான குடிநீர் வசதி இன்றி, முறையான பராமரிப்பின்றி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி, பழுதடைந்து இடிந்து விழும் சூழலில் இயங்கி வருகின்றன. அதேபோல், மாணவர் விடுதிகளில் தரமான உணவு, சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதில்லை என, மாணவர்கள் பலமுறை குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
  • தமிழ்நாட்டில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை நடத்தும் 1,331 மாணவர் விடுதிகளில், 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருவதாகவும், இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக, ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் திராவிட முன்னேற்ற கழகம் அரசு தெரிவித்திருந்தது. இதன்படி, சராசரியாக, ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு ரூ.39 மட்டுமே உணவுக்காகச் செலவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு மாணவருக்கு தினமும் ரூ.50 வீதம், மாதம் ரூ.1,500 உணவுப் படி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஒரு சதவீதம் கூட செலவு செய்யவில்லை:

  • ஒரு நாளைக்கு மாணவர்களுக்கு ரூ. 50 உணவுப் படி என்பதே மிகக் குறைவாக கருதும்போது, திமுக அரசு உண்மையில் செலவிடுவது ரூ.39 மட்டுமே. ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை, மாதம் ரூ.1,500 ல் இருந்து, ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை கண்டுகொள்ளவில்லை.
  • பட்டியல் சமூக மக்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு வழங்கும் நிதியையும், ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடாமல், ஆண்டுதோறும் திமுக அரசு திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது.
  • கடந்த 2024 ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி மாணவர் நல விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து, 5 மாணவிகள் காயமடைந்தனர். இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் மாணவர் விடுதிகள் இத்தனை அவலநிலையில் இருக்கும்போது,  தனது விளம்பர ஆசைக்காக விடுதிகளின் பெயரை மாற்றி விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளம்பரத்துக்காகச் செலவு செய்யும் 1 சதவீதத்தில் கூட, மாணவர்கள் நலனுக்காக திமுக அரசு செலவிடவில்லை.
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கான 2023 – 2024 விளம்பரச் செலவு, ரூ.1.65 கோடி ஆகும். 2024 – 25 ஆண்டு விளம்பரச் செலவு, ரூ. 11.48 கோடி ஆகும். இந்த பெயர் மாற்ற விளம்பரத்துக்கு இன்னும் சில கோடிகள் கணக்கு காட்டலாமே தவிர, இதனால் மாணவ, மாணவியருக்கு இதில் எந்தப் பயனும் இல்லை.