‘தைரியமா இருங்க’ இளைஞர் அஜித் குமாரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் இபிஎஸ் ஆறுதல்!
Sivaganga Custodial Death : சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் மரணம் அடைந்த விவகாரம் மாநிலத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு தொலைபேசி வாயிலாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி
சென்னை, ஜூலை 02 : சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் (Sivaganga Custodial Death) மரணம் அடைந்த விவகாரம் மாநிலத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும், திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றனர். லாக் அப் மரணங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளது. மேலும், உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினர், உறவினர்கள் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு தொலைபேசி வாயிலாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) ஆறுதல் கூறினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ”சில மனித மிருகங்கள் தாக்கியதால் அஜித் குமார் உயிரிழந்துவிட்டார். தைரியமா இருங்கம்மா. உங்கள் நீதி கிடைக்கும் வரை நாங்கள் துணை நிற்போம்.
‘தைரியமா இருங்க’
அதிமுகவும் உங்களுடன் துணை நிற்கும். இது மீள முடியாத துயரம். தாய் தன்னுடைய மகனை இழப்பது என்பது மிகப் பெரிய கொடுமையான விஷயம். இது யாராலும் மன்னிக்க முடியாது. இது பெற்ற தாய்க்கு தான் அந்த வலி தெரியும். அதனால், நீங்கள் மனம் தளராமல் இருக்க வேண்டும்.
எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அதற்கு ஈடாகாது. நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தைரியமாக இருக்க வேண்டும். நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். கண்டிப்பாக நீதி கிடைக்கும். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்” என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
அஜித் குமாரின் தாயாருக்கு இபிஎஸ் ஆறுதல்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தொலைபேசி வாயிலாக அஜித்குமாரின் தாயார் மற்றும் தம்பியுடன் பேசி, தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் பதிவு செய்து, ஆறுதல் தெரிவித்தார்கள்.#JusticeForAjithkumar pic.twitter.com/J5qXoBeGOn
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) July 2, 2025
தொடர்ந்து, அஜித் குமாரின் தம்பி நவீன் குமாரிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுடன் நிற்கும். நீதி நிலைநாட்டப்படும்” என தெரிவித்தார்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் அஜித் குமாரின் குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் பேசியிருந்தார். அப்போது, அஜித் குமார் மரணத்திற்கு அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், நேரில் சென்று அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உள்ளிட்டோர் ஆறுதல் கூறியுள்ளனர்.
மேலும், அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. உயிரிழந்த அஜித்குமாரின் தம்பிக்கு நிரந்தர அரசு வேலையும், அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை இளைஞர் அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.