பௌர்ணமி கிரிவலம்.. விழுப்புரத்தில் இருந்து திருவண்ணமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்..
Special Train To Tiruvannamalai: செப்டம்பர் 9, 2025 அன்று திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் மேற்கொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டு பக்தர்களின் வசதிக்காக, விழுப்புரம் முதல் திருவண்ணாமலை வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் 2025, செப்டம்பர் 7 ஆம் தேதி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
திருவண்ணாமலை, செப்டம்பர் 5, 2025: தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு தினசரி ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். அந்த வகையில் பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மிகவும் விமர்சையாக மக்களால் மேற்கொள்ளப்படுகிறது.
அந்நாளில் மக்கள் கிரிவலம் செய்வதோடு, கோவிலிலும் சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே பௌர்ணமி கிரிவலம் செய்ய தமிழகத்திலிருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்தும் ஏராளமான மக்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர்.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
பௌர்ணமி கிரிவலத்திற்காக வழக்கமாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வரும் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் 2,500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவை சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும். மேலும் கோவை, திருப்பூர், திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: தொடர் விடுமுறை.. ஆம்னி பேருந்துகளுக்கு பறந்த உத்தரவு.. போக்குவரத்து கழகம் நடவடிக்கை
பௌர்ணமி கிரிவலம் – சிறப்பு ரயில் இயக்கம்:
அதேபோல், பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டலம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் பௌர்ணமி வழிபாட்டில் அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் விவரம் (06130):
தேதி: 2025 செப்டம்பர் 7
விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில் காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு, முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
Also Read: எழும்பூர் இல்ல.. இனி தாம்பரத்தில் இருந்து விரைவு ரயில்கள் இயக்கம்.. அலர்ட் பயணிகளே!
திருவண்ணாமலை – விழுப்புரம் திரும்பும் ரயில் அதே நாளில் பிற்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். இந்த ரயில் 8 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். மேலும், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய இடங்களில் நின்று செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.