நாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம்.. பலியான விசைத்தறி தொழிலாளி!
சேலம் மாவட்டம், இலவம்பாளையத்தைச் சேர்ந்த குப்புசாமி, நாய் கடித்ததால் சிகிச்சை பெறாமல் ரேபிஸ் நோயால் உயிரிழந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு நாய்க்கடி ஏற்பட்டபோது சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அலட்சியம் செய்ததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாய் கடித்தால் உடனடி சிகிச்சை தேவை என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

சேலம், ஆகஸ்ட் 19: சேலம் மாவட்டத்தில் நாய் கடித்து சிகிச்சை பெறாத ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே நாய் கடித்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை அடுத்துள்ள இலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. விசைத்தறி தொழிலாளியான இவர் தனது மனைவி சித்ரா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இதனிடையே அந்த நாய் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் வெறிபிடித்து அப்பகுதியில் உள்ள சிலரை கடித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மக்கள் குப்புசாமியிடம் புகார் அளித்து வந்த நிலையில் ஆத்திரமடைந்த அவர் நாயை கண்டிக்க முயன்று கையை ஓங்கியுள்ளார். ஆனால் தன்னை தாக்க வருகிறார் என்ற அச்சத்தில் எதிர்பாராத விதமாக குப்புசாமியின் காலில் நாய் கடித்துள்ளது. காயம் பெரிய அளவில் இல்லாத நிலையில் அவர் மருத்துவ சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருந்துள்ளார். இப்படியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்புசாமியின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தண்ணீர் குடிக்க முடியாமல் அவர் நாய் போல பல்வேறு செய்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Also Read: சிறுவர்களை துரத்திய தெரு நாய்.. ஹீரோ என்ட்ரி கொடுத்து காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட்!
ரேபிஸ் தொற்று
உடனடியாக அவரை அழைத்துக்கொண்டு தாரமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். அங்கே குப்புசாமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு ரேபிஸ் நோய் தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் மாவட்டத்தில் உள்ள மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குப்புசாமி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 18) பலனின்றி உயிரிழந்தார் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: சென்னையில் 2024-ல் மட்டும் 20,000 நாய்க்கடி சம்பவங்கள்.. நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்!
மருத்துவர்கள் எச்சரிக்கை
பொதுவாக நாய் அல்லது ஏதேனும் விலங்குகள் கடித்துவிட்டால் உடனடியாக முதலுதவி செய்து மருத்துவரை அணுகி தடுப்பூசி போடுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலுதவியாக முதலில் காயப்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரில் நன்கு கழுவி ரத்தப்போக்கு இருந்தால் அதனை நிறுத்த வேண்டும். பின்னர் அருகில் இருக்கும் மருத்துவமனையை அணுகி உடல்நல பரிசோதனை செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். இதன் மூலம் கடுமையான பின் விளைவுகளை தடுக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் நீங்கள் வசிக்கும் பகுதியில் நாய்கள் வெறிபிடித்த நிலையில் இருந்தால் உடனடியாக மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். சமீபகாலமாக தெரு நாய்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது உயிரிழப்பு வரை மிக மோசமான பாதிப்பை உண்டாக்கி வருகிறது.