“விபத்துகள், குற்றங்கள் இல்லாத புத்தாண்டு தினம்”.. சென்னை போலீசாருக்கு குவியும் பாராட்டு!!
New Years Day; சென்னை பெருநகர போலீசார் மேற்கொண்ட சிறப்பான பணியால் 2026-ம் புத்தாண்டு கொண்டாட்டம், சென்னை மாநகரில், அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும், உயிர் இழப்புகள் இல்லாமலும், விபத்துகள் தவிர்க்கப்பட்டும், குற்றங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடவாமலும் கொண்டாடப்பட்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

2026 புத்தாண்டு
சென்னை, ஜனவரி 01: புத்தாண்டு தினத்தை ஒட்டி சென்னையில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகளால் விபத்து, உயிரிழப்பு, குற்றங்கள் இல்லாத புத்தாண்டு தினமாக அமைந்தது. இதற்காக அயாரது பாடுபட்ட காவலர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் கொட்டும் மழையில் நள்ளிரவில் மெரினா, பெசண்ட் நகர் கடற்கரை, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் திரண்டு புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். மால்கள், பூங்காக்களிலும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர். இதற்காக நேற்று மாலை 6 மணி முதலே சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நகரின் முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்யப்பட்டு சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணைகளும் நடந்தது.
இதையும் படிக்க: Happy New Year 2026: புத்தாண்டை கொண்டாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்ற மக்கள்!
இதுதவிர 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டனர். இதோடு 30 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் ரேஸ் நடத்தவிடாமல் தடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல்துறையினரின் 2026 புத்தாண்டு தினத்தை ஒட்டி தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளினால் உயிரிழப்பு மற்றும் குற்றங்கள் நடவாத புத்தாண்டு தினமாக அமைந்துள்ளது.
புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட பலத்த ஏற்பாடு:
2026ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமலும், விபத்தில்லாமலும், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) என மொத்தம் 19,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கைகள், போக்குவரத்து சீர் செய்தல், கூட்ட நெரிசலை தவிர்க்க ஒரு வழி பாதை அமைத்தும், விபத்தில்லாமல் கொண்டாடுவதற்காக மேம்பாலங்களில் இரவு நேரங்களில் மூடப்பட்டும், கடற்கரை பகுதிகளில் நீரில் பொதுமக்கள் இறங்காமல் இருக்க தடுப்புகள் அமைத்தும், காவல் உதவி மையங்கள், கூடாரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
போலீசாரின் அயராத பணி:
நேற்று (31.12.2025) சென்னை பெருநகர காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் அயராது மேற்கொண்ட சிறப்பான பணியால் 2026-ம் புத்தாண்டு கொண்டாட்டம், சென்னை பெருநகரில், அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும், உயிர் இழப்புகள் இல்லாமலும், விபத்துகள் தவிர்க்கப்பட்டும், குற்றங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடவாமல் கொண்டாடப்பட்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: 2026 New Year Wishes: ஸ்டாலின் முதல் விஜய் வரை தலைவர்களின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், நேற்று (31.12.2025) சென்னை பெருநகரில் சிறப்பாக பணிகள் மேற்கொண்ட, காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரை பாராட்டி, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.