திருத்தணியில் சோகம்.. தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுவன் பலி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நான்கு வயது சிறுவன் யோகித், மாத்திரை தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கப்பட்ட மாத்திரை தொண்டையில் சிக்கியதால் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என குழந்தைகள் நல நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

4 வயது சிறுவன் மரணம்
திருவள்ளூர், ஆகஸ்ட் 19: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்தில் பி.ஆர். பள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவர் தனது மனைவி சசிகலா மற்றும் நான்கு வயது சிறுவனுடன் வசித்து வருகிறார். தம்பதியினர் இருவரும் நெசவுத் தொழில் செய்து வருகின்றனர். இப்படியான நிலையில் நான்கு வயது சிறுவனான யோகித்திற்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்துள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர் மருந்து, மாத்திரைகளை பரிந்துரை செய்துள்ளார். அதன்படி மாத்திரையை குழந்தை யோகித்திற்கு பெற்றோர்கள் கொடுத்துள்ளனர். ஆனால் எதிர்பாராதவிதமாக மாத்திரை குழந்தையில் தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இப்படியான நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் யோகித் உயிரிழந்தான். இந்த சம்பவத்தால் யோகித் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத சம்பவம் காண்பவர்களை கண் கலங்க வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: மழைக்காலத்தில் அதிகரிக்கும் கொசு தொல்லை.. குழந்தைகளுக்கு கொசு மருந்து பயன்படுத்தலாமா..?
பெற்றோர்கள் கவனத்திற்கு
சமீப காலமாக குழந்தைகள் மரணம் என்பது அதிகரித்து வருகிறது. இது பெற்றோர்களின் கவனக்குறைவால் நிகழ்ந்ததாக கூறப்பட்டாலும் தவிர்க்கக் கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. எனவே குழந்தைகள் விஷயத்தில் எப்போதும் பெற்றோர்கள் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உடல் நல பிரச்சனைகளுக்கு குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது பல விஷயங்களை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என குழந்தை நல நிபுணர்கள் அறிவுறுத்திகின்றனர்.
எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளுக்கு மாத்திரையை நேரடியாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், அதனை தூளாக்கி பால், ஜூஸ் என எதிலாவது கலந்து கொடுக்கலாம். அல்லது இரண்டாக உடைத்து அதற்கு ஏற்ப எடுத்துக் கொள்ள சொல்லலாம் என தெரிவிக்கின்றனர். மேலும் குழந்தை மாத்திரையை முழுவதும் விழுங்கி விட்டார்களா என்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். சில நேரங்களில் அது தொண்டையில் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே மாத்திரை எடுத்துக் கொள்ளும் போது தண்ணீர் சிறிது அதிகமாக அருந்தவும்.
Also Read: புதுக்கோட்டையில் தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை.. மூச்சு திணறி உயிரிழந்த சோகம்..
அதுமட்டுமல்லாமல் சில மாத்திரைகளின் சுவை குழந்தைகளை ஈர்க்கும். அதனை அளவாக வைப்பது நல்லது. மேலும் வீட்டில் பெரியவர்கள் உடல் நல பிரச்னைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் அதனை அவர்களுக்கு எட்டாத தூரத்தில் வைப்பது மிகவும் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.