அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… பாதுகாப்பு பணியில் 2200 போலீஸ்.. இந்த பகுதிக்கு செல்ல தடை

Avaniyapuram Jallikattu Preparations: உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 15, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... பாதுகாப்பு பணியில் 2200 போலீஸ்.. இந்த பகுதிக்கு செல்ல தடை

மாதிரி புகைப்படம்

Published: 

14 Jan 2026 21:53 PM

 IST

மதுரை, ஜனவரி 14 :  பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டு, புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15, 2026 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அவனியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவில் பொதுமக்கள், மாடு பிடி வீரர்கள், உலகெங்கிலும் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், மதுரை மாநகர காவல்துறை ஜனவரி 14, 2026 இன்று இரவு 10 மணி முதல் சிறப்பு போக்குவரத்து மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது. அதுகுறித்து முழுமையாக இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மதுரையில் போக்குவரத்து மாற்றம்

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பிலிருந்து அவனியாபுரம் நகருக்குள் எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. அதேபோல், அவனியாபுரம் அம்பேத்கர் சிலை சந்திப்பிலிருந்து திருப்பரங்குன்றம் செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. திருப்பரங்குன்றம் செல்லும் அனைத்து வாகனங்களும் அவனியாபுரம் பைபாஸ் சாலை மற்றும் வெள்ளக்கல் வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்…இறுதி கட்டத்தில் பணிகள்…கார்,டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள்!

முத்துப்பட்டி சந்திப்பிலிருந்து திருப்பரங்குன்றம் வழியாக அவனியாபுரம் செல்லும் பாதையும் மூடப்படும். இந்த சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் வெள்ளக்கல் சந்திப்பு, கல்குளம், வெள்ளக்கல் மற்றும் அவனியாபுரம் பைபாஸ் சாலை வழியாக மதுரை மாநகரம் அல்லது பெருங்குடி பகுதிகளுக்கு செல்ல வேண்டும். அய்யனார் கோவில் வழியாக மருதுபாண்டியர் சிலை சந்திப்பில் இருந்து அவனியாபுரம் நகருக்குள் வாகனங்கள் நுழைய அனுமதி இல்லை.

ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள், திருப்பரங்குன்றம் மற்றும் முத்துப்பட்டி சந்திப்புகளில் காளைகளை இறக்கி, வெள்ளக்கல் வழியாக அவனியாபுரம் பைபாஸ் சாலையை அடைந்து, பெரியார் நகர் சாலை மற்றும் வெள்ளக்கல் கிளாட்வே மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

மதுரை மாநகரத்திலிருந்து வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை டிமார்ட் வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும். பெருங்குடி மற்றும் செம்பூரணி சாலை வழியாக வரும் வாகனங்கள் கே4 உணவகத்தின் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும். திருப்பரங்குன்றம் மற்றும் முத்துப்பட்டி வழியாக வரும் வாகனங்கள், திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள எஸ்.பி.ஜே. பள்ளி வளாகத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பொங்கல் பொருள்கள் விற்பனை அமோகம்…கரும்பு ரூ.700-மல்லி கிலோ ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை!

மேலும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் போட்டி முடிந்த பிறகு, அவனியாபுரம் பைபாஸ் – செம்பூரணி சாலை சந்திப்பு வழியாக வாகனங்களில் கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு பணியில் 2,200 போலீசார்

இது தொடர்பாக மதுரை காவல் ஆணையர் லோகநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்காக, எஸ்பி நிலை அதிகாரிகள் தலைமையில் 2,200 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஜல்லிக்கட்டு அரங்கம், காளை பரிசோதனை பகுதி, காளைகள் வெளியேறும் வழித்தடம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றார்.

மேலும், பேசிய அவர், தள்ளுமுள்ளு ஏற்படாமல் தவிர்க்க, முதற்கட்டமாக டோக்கன் பெற்ற முதல் 500 காளைகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும் என்றார்.  மது அருந்திய நிலையில் காளைகளை கொண்டு வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும், பாதுகாப்பு கவசங்களுடன் போலீசார் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

ஜப்பானில் முடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
வாகன ஓட்டியை தாக்கிய போக்குவரத்து காவலர் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர்.... 50 சதவிகித வாய்ப்பு - துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்
திருடப்பட்ட செல்போனை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்த இளம்பெண்