சென்னையில் 19 புறநகர் ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
19 Electric Trains Cancelled for Two Days in Chennai | சென்னையில் உள்ள பெரும்பாலான மக்கள் புறநகர் ரயில் சேவையை பெரிதும் நம்பியுள்ளனர். இந்த நிலையில், மே 15, 2025 மற்றும் மே 17 2025 ஆகிய தேதிகளில் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, மே 15 : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் (Chennai Central Railway Station) இருந்து செல்லும் 19 புறநகர் மின்சார ரயில்கள் இரண்டு நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மொத்தம் இரண்டு நாட்கள் இந்த 19 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில், ரயில்கள் ரத்து குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுமக்களின் பிரதான போக்குவரத்தாக உள்ள மின்சார ரயில்கள்
சென்னையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசிக்கும் நிலையில் , அவர்கள் தங்களது அன்றாட போக்குவரத்து தேவைகளுக்காக ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். பள்ளி, கல்லூரி மற்றும் அலுவகம செல்லும் ஏராளமான பொதுமக்களுக்கு மின்சார ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. குறைந்த கட்டணத்தில் விரைவாக பயணம் செய்ய முடியும் என்பதால் பலரும் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, மின்சார ரயில் சேவை பொதுமக்களின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
19 மின்சார ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய செய்தி குறிப்பு
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, சென்னை கவரப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் மே 15, 2025 மற்றும் மே 17, 2025 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1:20 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக அதிகாலை 5 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்டர்ல – கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல கடற்கரை – கும்மிடிப்பூண்டி, ஆவடி – சென்ட்ரல் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மொத்தம் 19 புறநகர் மின்சார ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக மே 15, 2025 மற்றும் மே 17, 2025 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை சென்ட்ரல் பகுதியில் இருந்து பொன்னேரிக்கும், மீஞ்சூர் மற்றும் எண்ணூருக்கும் இடையே மொத்தம் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.