Virat Kohli : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..!

விராட் கோலி இறுதியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இன்ஸ்டாகிராமில் தெரிவித்த விராட் கோலி, நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்த நினைவுகளை குறிப்பிட்டு எழுதியுள்ளார்

Virat Kohli : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..!

விராட் கோலி

Updated On: 

12 May 2025 12:44 PM

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது முடிவு இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. விராட் கோலி தனது ஓய்வு குறித்து சமூக ஊடகங்களில் தெரிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இன்ஸ்டாகிராமில் தெரிவித்த விராட் கோலி, நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஜெர்சியை அணிந்து 14 ஆண்டுகள் ஆகிறது. உண்மையைச் சொன்னால், இந்த வடிவம் என்னை இப்படியொரு பயணத்தில் அழைத்துச் செல்லும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்து பார்த்ததில்லை. அது என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, என் வாழ்நாள் முழுவதும் நான் என்னுடன் எடுத்துச் செல்லும் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது எனக் குறிப்பிட்டுள்ளார்

விராட் பதிவு

டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை

விராட் கோலி தனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் 210 இன்னிங்ஸ்களில் 46.85 சராசரியுடன் 9230 ரன்கள் எடுத்துள்ளார். அதாவது விராட் கோலி தனது 10,000 டெஸ்ட் ரன்கள் என்ற இலக்கை தொட இன்னும் 770 ரன்கள் ம்ட்டுமே இருக்கும் போது இந்த முடிவை எடுத்துள்ளார். விராட் கோலியின் டெஸ்ட் சதங்கள் மற்றும் அரை சதங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமம்தான். அவர் டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்களையும் 31 அரைசதங்களையும் அடித்துள்ளார்.

ரசிகர்கள் வருத்தம்

விராட் கோலியின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது. குறிப்பாக  இன்னும் 10ஆயிரம் ரன்களை எடுக்க வெறும் 770 ரன்கள் மட்டுமே இருக்கும்போது கோலி இந்த முடிவை எடுத்தது கிரிக்கெட் ரசிகர்களை புலம்ப வைத்துள்ளது. இன்னும் சில போட்டிகள் விளையாண்டு அந்த சாதனையை அவர் செய்திருக்கலாம் என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகரின் பதிவு

கடந்த 2 நாட்களாக இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. இது குறித்து கோஹ்லி பிசிசிஐ-யிடம் தெரிவித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. அவரை சம்மதிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது பலனளிக்கவில்லை எனவும் கூறப்பட்டது. இந்நிலையில்2025, மே 12 திங்கள் கிழமை, விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தின் முடிவை சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார்