Senuran Muthusamy: தமிழ்நாடு பூர்வீகம்.. இந்தியாவிற்கு எதிராக சதம் அடித்து சம்பவம்.. யார் இந்த செனுரன் முத்துசாமி?

India - South Africa 2nd Test: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம், செனுரன் முத்துசாமி பல முக்கிய சாதனைகளைப் படைத்தார். கடந்த 15 ஆண்டுகளில், இந்திய அணிக்கு எதிராக 7-வது இடத்தில் இருக்கும் ஒரு வீரர் இரண்டு முறை மட்டுமே டெஸ்ட் சதம் அடித்துள்ளார். அவர்களில் செனுரன் முத்துசாமியும் ஒருவர்.

Senuran Muthusamy: தமிழ்நாடு பூர்வீகம்.. இந்தியாவிற்கு எதிராக சதம் அடித்து சம்பவம்.. யார் இந்த செனுரன் முத்துசாமி?

செனுரன் முத்துசாமி

Published: 

24 Nov 2025 08:00 AM

 IST

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தங்கள் நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடும்போது சதம் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கனவு காண்பார்கள். அதேநேரத்தில், தான் வாழும் நாட்டிற்காக தனது சொந்த நாட்டிற்கு எதிராக ஒருவர் சதம் அடித்தால் எவ்வளவு பெரிய சாதனை. அதுவும் அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றால் எவ்வளவு பெரிய கர்வம் ஏற்படும். அத்தகைய ஒரு நிகழ்வுதான் சமீபத்திய இந்தியா – தென்னாப்பிரிக்கா (India – South Africa) இடையிலான டெஸ்ட் போட்டியில் அரங்கேறியுள்ளது. அந்த வீரர் வேறுயாருமல்ல, தென்னாப்பிரிக்கா வீரர் செனுரன் முத்துசாமி (Senuran Muthusamy).

இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், தென்னாப்பிரிக்க வீரர் செனுரன் முத்துசாமி தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தை பெற்றார். தென்னாப்பிரிக்கா அணிக்காக 7வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த செனுரன் முத்துசாமி தனது முதல் டெஸ்ட் சதத்தை எட்ட 192 பந்துகளை எடுத்துக்கொண்டார். இதுமட்டுமின்றி, பல்வேறு சாதனைகளையும் படைத்தார். இந்தநிலையில், யார் இந்த செனுரன் முத்துசாமி என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: இந்தியாவிற்கு எதிராக இந்தியர் செய்த சம்பவம்.. 480 ரன்கள் பின்தங்கிய நிலையில் ரிஷப் படை!

யார் இந்த செனுரன் முத்துசாமி..?


கடந்த 1994ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி செனுரன் முத்துசாமி தென்னாப்பிரிக்காவின் நடால் மாகாணத்தில் உள்ள டர்பனில் பிறந்தார். இவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், மூதாதையர்கள் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். இவரது குடும்பத்தில் பலர் இன்னும் தமிழ்நாட்டில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. செனுரன் முத்துசாமி கிளிஃப்டன் கல்லூரியில் சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டமும், குவாசுலு-நடால் பல்கலைக்கழகத்தில்  பெற்றார், ஊடகம் மற்றும் சந்தைப்படுத்துதலும் பயின்றார். செனுரன் முத்துசாமி கிரிக்கெட் வாழ்க்கை டர்பனில் பள்ளிப் போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் தொடங்கி, தனது திறமையையும் வெளிப்படுத்தினார்.

11 வயதுக்குட்பட்டோர் முதல் 19 வயதுக்குட்பட்டோர் வரை குவாசுலு-நடாலில் கிரிக்கெட்டில் கலக்க தொடங்கினார்.  ஆரம்பத்தில் அவர் ஒரு கிரிக்கெட் வீரராக வருவார் என்று நம்பவில்லை என்றாலும், அசாத்திய திறமையால் தென்னாப்பிரிக்க 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு அழைத்துச் சென்றது. 2015–16 சீசனில் செனுரன் முத்துசாமி டால்பின்ஸால் ஒரு டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனாக ஒப்பந்தம் செய்யப்படப்போது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது.

செனுரன் முத்துசாமியை முதன்முதலில் கிரிக்கெட் களத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட அவரது தந்தை, அவருக்கு 11 வயதாக இருந்தபோது இறந்துவிட்டார். இவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, அவரது தாயார் வாணி மூட்லி செனுரன் முத்துசாமி வளர்த்தார். இவரது தாயார் அவரை ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக்குவதில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, கிரிக்கெட் விளையாட்டைக் கற்றுக் கொடுத்தார், பின்னர் அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நுட்பங்களை வீடியோக்களில் பதிவு செய்தார்.

2019ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம்:

2019ம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்திற்கான தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் அணியில் முதன்முறையாக செனுரன் முத்துசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். விசாகப்பட்டினம் டெஸ்டில் செனுரன் முத்துசாமி தனது முதல் போட்டியின் முதல் டெஸ்ட் விக்கெட்டை, விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ALSO READ: கேப்டனாக கே.எல்.ராகுல்.. தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

செனுரன் முத்துசாமி சாதனை:

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம், செனுரன் முத்துசாமி பல முக்கிய சாதனைகளைப் படைத்தார். கடந்த 15 ஆண்டுகளில், இந்திய அணிக்கு எதிராக 7-வது இடத்தில் இருக்கும் ஒரு வீரர் இரண்டு முறை மட்டுமே டெஸ்ட் சதம் அடித்துள்ளார். அவர்களில் செனுரன் முத்துசாமியும் ஒருவர். குயின்டன் டி காக் இதற்கு முன்பு 2019ம் ஆண்டு இந்த சாதனையைப் படைத்தார். கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் டெஸ்ட் சதம் அடித்த முதல் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் செனுரன் முத்துசாமி பெற்றார். இதற்கு முன்னதாக, டீன் எல்கர் கடைசியாக 2019ம் ஆண்டு இந்த சாதனையை படைத்தார்.

 

TRAI இன் புதிய 160 எண்.. இதன் சாராம்சம் என்ன?
திரிஷ்யம் 3 படம் இப்படி தான் இருக்கும்.. மனம் திறந்த ஜித்து ஜோசப்..
15,000 கி.மீ பயணித்த மாரிச் கழுகு
திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை... டிரம்ப்பின் முரணான பேச்சால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி