Mohammed Shami: யாருக்காவது என்னுடன் ஏதாவது பிரச்சனையா..? ஓய்வு குறித்த கேள்வி.. முகமது ஷமி காட்டமான பதில்!

Shami Denies Retirement Rumors: முகமது ஷமி ஓய்வு பெறுவது குறித்த வதந்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அஸ்வின் மற்றும் புஜாரா ஓய்வு பெற்றதை தொடர்ந்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தனது ஆர்வம் குறையும் வரை கிரிக்கெட் விளையாடுவார் என்றும், உள்நாட்டு போட்டிகளில் விளையாடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Mohammed Shami: யாருக்காவது என்னுடன் ஏதாவது பிரச்சனையா..? ஓய்வு குறித்த கேள்வி.. முகமது ஷமி காட்டமான பதில்!

முகமது ஷமி

Published: 

28 Aug 2025 10:58 AM

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் சமீபத்தில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் (Mohammed Shami) எதிர்காலம் குறித்து அடுத்தடுத்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, அவர் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அவர் கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார்.

இதுபோன்ற சூழ்நிலையில், முகமது ஷமி விரைவில் ஓய்வு பெற இருப்பதாக வெளியான வதந்திகளை அவரே மறுத்துள்ளார். அப்போது ஷமி இப்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று கூறியது மட்டுமல்லாமல், தனது ஓய்வு குறித்து அதிக ஆர்வம் காட்டுபவர்களை கடுமையான விமர்சித்துள்ளார்.

ALSO READ: ஐபிஎல்லிலும் ஆஹா! ஓஹோ! அஸ்வின் படைத்த சாதனைகள் இவ்வளவா..?

என்ன சொன்னார் முகமது ஷமி..?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட முகமது ஷமி, தனது மன உறுதி குறையும் வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறினார். இது குறித்து அவர் பேசிய நேர்காணலில், “யாருக்காவது ஏதாவது பிரச்சனை இருந்தால், சொல்லுங்கள், நான் ஓய்வு பெற்றால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக மாறுமா? யாருடைய வாழ்க்கையில் நான் ஓய்வு பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, யாருக்காவது பாரமாக நான் மாறிவிட்டேனே என்று சொல்லுங்கள்? எனக்கு கிரிக்கெட் சலிப்பூட்டும் வரை அல்லது என மன உறுதி உடையும் நாளில், நானே வெளியேறிவிடுவேன்” என்று கூறினார்.

ஓய்வு குறித்த கேள்விக்கு பதில்:

தொடர்ந்து பேசிய அவர், “இந்திய அணியில் என்னை தேர்ந்தெடுக்காமல் இருக்கலாம், ஆனால் நான் கடினமாக உழைப்பேன். சர்வதேச கிரிக்கெட்டுக்கு நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், நான் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவேன். எங்காவது அல்லது வேறு எங்காவது விளையாடுவேன். 2023 இல் நாங்கள் மிக அருகில் வந்தோம், ஆனால் அதை வெல்ல முடியவில்லை.

ALSO READ: உண்மையான ரசிகர் ட்ரோல் செய்ய மாட்டார்கள் – முகமது ஷமி!

2027 இல் நான் அந்த இடத்தை அடைய விரும்புகிறேன். கடந்த இரண்டு மாதங்களாக நான் எடை குறைப்பு மற்றும் பந்துவீச்சு குறித்து உழைத்து வருகிறேன். நான் இன்னும் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறேன். என் உற்சாகம் குறையும் நாள், நானே அதை விட்டுவிடுவேன். அதுவரை நான் தொடர்ந்து போராடுவேன். ” என்று தெரிவித்தார்.