T20 World Cup 2026: விரைவில் டி20 உலகக் கோப்பை.. பரபரப்பை உச்சத்திற்கு கொண்டு போகும் 5 முக்கிய போட்டிகள்!
T20 World Cup 2026 Major Rivalry: அமெரிக்காவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும் தங்களது அணியை இன்னும் அணிகளை அறிவிக்கவில்லை. எனவே, இந்த இரு நாடுகளும் வருகின்ற ஜனவரி 31ம் தேதிக்குள் தங்களது அணிகளை அறிவிக்க வேண்டும். இந்தநிலையில், டி20 உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 போட்டிகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

டி20 உலகக் கோப்பை 2026ல் முக்கியமான 5 போட்டிகள்
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) 10வது பதிப்பு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த மிகப்பெரிய போட்டியானது வருகின்ற 2025 பிப்ரவரி 7ம் தேதி பிரமாண்டமாக தொடங்குகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையை போலவே, 2026 டி20 உலகக் கோப்பையிலும் 20 சர்வதேச அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக போட்டியிட இருக்கின்றன. பங்கேற்கும் 20 அணிகளில் இதுவரை 18 அணிகள் ஏற்கனவே உலகக் கோப்பைக்கான அணிகளை அறிவித்துள்ளனர். வங்கதேசத்திற்கு பதிலாக வைல்ட் கார்டு எண்ட்ரி கொடுத்த ஸ்காட்லாந்து (Scotland) அணி கூட தங்களது அணியை அறிவித்தது. குரூப் ஏ- வில் இடம்பெற்றுள்ள அமெரிக்காவும், குரூப் டியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும் தங்களது அணியை இன்னும் அணிகளை அறிவிக்கவில்லை. எனவே, இந்த இரு நாடுகளும் வருகின்ற ஜனவரி 31ம் தேதிக்குள் தங்களது அணிகளை அறிவிக்க வேண்டும். இது ஐசிசி காலக்கெடுவாகும். இந்தநிலையில், டி20 உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 போட்டிகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகல்.. மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் வங்கதேசம்..?
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் கவனிக்க வேண்டிய 5 முக்கிய போட்டிகள்:
இந்தியா v பாகிஸ்தான் – 2026 பிப்ரவரி 15, கொழும்பு
2025 ஆசியக் கோப்பை சர்ச்சைக்கு மத்தியில் வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி கொழும்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவும் பாகிஸ்தான் அணிகளும் மோத இருக்கின்றன. சர்வதேச போட்டிகளில் இந்தியா பாகிஸ்தானை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 3 போட்டிகளில் 3லிலும் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், கடந்த 2009ம் ஆண்டு ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் யூனிஸ் கானின் தலைமையில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றததால், பாகிஸ்தானை இந்திய அணி சாதாரணமாக நினைக்கக்கூடாது.
பாகிஸ்தான் அணி சமீபத்திய உள்நாட்டு டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கையை வீழ்த்தியுள்ளது. எனவே, 2024ம் ஆண்டு வெற்றிக்குப் பிறகு ஒரு டி20 தொடரைக்கூட இழக்காத சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு தலைவலி நிச்சயம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா v ஆப்கானிஸ்தான் – 2026 பிப்ரவரி 11, அகமதாபாத்
2024 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. எனவே, ஆப்கானிஸ்தான் அணி நிச்சயம் தென்னாப்பிரிக்கா அணியை பழிவாங்க முயற்சிக்கும். அதற்கு காரணம், ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சு தாக்குதல் இந்திய ஆடுகளங்களில் இதுவரை சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஃபசல்ஹாக் ஃபரூக்கி மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோர் தங்கள் வேக தாக்குதலையும் கொடுக்கலாம். இருப்பினும், தென்னாப்பிரிக்காவில் டெவால்ட் பிரெவிஸ் மற்றும் குவேனா மபாகா போன்ற இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர் குயின்டன் டி காக் திரும்பியிருப்பது தென்னாப்பிரிக்கா அணியை வலுப்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்து v வெஸ்ட் இண்டீஸ் – 2026 பிப்ரவரி 11, மும்பை
இந்திய மண்ணில் 2016 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. எனவே, இந்திய மண்ணில் மீண்டும் இதை சரிசெய்ய இங்கிலாந்து அணி முயற்சிக்கும். சமீபத்தில், இரு அணிகளின் டி20 கேப்டன் பதவியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, புதிய கேப்டன்களின் கீழ் டி20 உலகக் கோப்பை வெல்ல இரு அணிகளும் முயற்சிக்கும்.
ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, சமீபத்தில் சொந்த மண்ணிலும் நியூசிலாந்திலும் பெற்ற வெற்றிகளால் வலுவானதாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபகாலமாக சொதப்பி வந்தபோதிலும், ஷாய் ஹோப் தலைமையில் முடிவுகளைச் சரிசெய்ய கடுமையாக போராடும்.
ஆஸ்திரேலியா v இலங்கை- 2026 பிப்ரவரி 16, கண்டி
வருகின்ற 2026 பிப்ரவரி 16 ம் தேதி கண்டியில் நடைபெறும் போட்டியில், முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியாவும், இலங்கை அணிகளும் மோதுகின்றன. ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில், ஆஸ்திரேலியா நேருக்கு நேரில் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதுவரை இலங்கை அணிக்கு எதிரான 5 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
இருப்பினும், இலங்கை அணியில் சமீப காலமாக பாதும் நிஸ்ஸங்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் குசல் பெரேராவுடன் இணைந்து, வனிந்து ஹசரங்க, நுவான் துஷார மற்றும் மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் இலங்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள். அதேநேரத்தில், ஆஸ்திரேலிய அணியை எப்போதும் எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி எளிதாக வெற்றியை விட்டுக்கொடுக்காமல் கடுமையாக முயற்சிக்கும்.
ALSO READ: அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐசிசி.. உள்ளே வந்த ஸ்காட்லாந்து.. வங்கதேசத்திற்கு ஏமாற்றம்!
இத்தாலி v நேபாளம் – 2026 பிப்ரவரி 12, மும்பை
டி20 உலகக் கோப்பையில் அறிமுக அணியான இத்தாலி, சர்வதேச கிரிக்கெட்டில் முன்னேற்றம் அடைந்து வரும் நேபாள அணியை எதிர்கொள்கிறது. இது ஒரு அற்புதமான போட்டியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஐரோப்பிய தகுதிச் சுற்றில் ஸ்காட்லாந்து போன்ற முக்கிய அணிகளை வீழ்த்தி இத்தாலி அணி டி20 உலகக் கோப்பைக்கான தங்கள் இடத்தைப் பிடித்தபோது உலகையே வியப்பில் ஆழ்த்தினர். நேபாள அணியும் ஆசிய தகுதிச் சுற்றில் தோற்கடிக்கப்படாமல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. எனவே, இந்த போட்டியும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையலாம்.