சஞ்சு சாம்சனின் அதிரடி விளையாட்டு: டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி
டெல்லி அணியில் நிலைத்து விளையாடிய சமீர் ரிஸ்வி 40 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து, 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் காய்க்வாட் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் 6 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

கோப்பு புகைப்படம்
மே 5, 2026: 19ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற 48வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால், 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.
155 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்த டெல்லி:
டெல்லி அணியில் நிலைத்து விளையாடிய சமீர் ரிஸ்வி 40 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து, 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் காய்க்வாட் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் 6 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
சிஎஸ்கே அணி அபார வெற்றி:
மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி, 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரரான உற்வில் படேல் 17 ரன்களில் வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய கார்த்திக் சர்மா நிதானமாக விளையாடி, சஞ்சு சாம்சனுடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் எடுத்தார்.
இருவரும் அவுட் ஆகாமல் சிறப்பாக விளையாடி, சென்னை அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பில் அக்சர் படேல் மற்றும் லுங்கி என்கிடி தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இறுதியில், சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.