ஷாக்கான பாக்., வீரர்கள்.. ரசிகர் செய்த செயல்.. அதிர்ந்த லாகூர் மைதானம்!
பாகிஸ்தான்-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டியின்போது பாபர் அசாம் ரசிகர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி மைதானத்தின் வீரர்கள் இருந்த பகுதிக்குள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபர் அசாமின் பிறந்தநாள் அன்று நடந்த இச்சம்பவம், வீரர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான், அக்டோபர் 16: பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரின் போது ரசிகர் ஒருவர் செய்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்கா அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் லாகூரில் கடந்த அக்டோபர் 12ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 378 ரன்களும், தென்னாப்பிரிக்கா அணி 269 ரன்களும் எடுத்தது. தொடர்ந்து 109 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 277 ரன்கள் எடுத்தா வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களம் கண்டது.
ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மற்றுமொரு சிறப்பாக அமைந்தது. காரணம் அந்த அணியின் முன்னாள் கேப்டனான பாபர் அசாமிற்கு நேற்று (அக்டோபர் 15) 31வது பிறந்தநாளாகும்.




இதையும் படிங்க: கிரிக்கெட்டில் அழுத்தத்தின் கீழ் ஓய்வு? உண்மையை உடைத்த அஸ்வின்!
பாபர் அசாமை காண திரண்ட ரசிகர்கள்
பாகிஸ்தானுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நான்கு நாட்கள் மட்டுமே நடந்த நிலையில், இந்த ஆட்டத்தில் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் ஒரே ஒரு காரணத்திற்காகவே வந்திருந்தனர். அது பாபர் அசாமை மட்டுமே காண்பதற்கு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. இதனை வர்ணனை செய்பவர்களே கண்டு திகைப்படைந்தனர். ஆனால் இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக அமைந்தது.
ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்
Unbelievable😳 Next Level Stardom of King Babar 👑 #Babarazam𓃵 pic.twitter.com/prgk9cZgWT
— 🇵🇸 عليّ (@_Aleeeeey) October 15, 2025
இந்நிலையில் கடாபி மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கியிருந்த டிரஸ்ஸிங் அறைக்கு நேற்று ஸ்டாண்ட் வழியாக ரசிகர் ஒருவர் பாதுகாப்பையும் மீறி சர்வ சாதாரணமாக ஏறி சென்றார். மஜித் கான் என்ற அந்த ரசிகர் பாபர் அசாமை காண வந்ததாக கூறியுள்ளார். அவர் அருகே வருவதை கண்ட பாகிஸ்தான் வீரர்கள் திகைப்படைந்தனர். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 38 வயதில் பாகிஸ்தான் அணியில் இடம்.. ஓய்வு வயதில் அறிமுகமாகும் ஆசிஃப் அப்ரிடி!
தான் சிக்கிக் கொண்டோம் என பிரச்சனையை உணர்ந்த மஜித் கான் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். முதலில் தான் ஏறி வந்த ஸ்டாண்ட் என்க்ளோஷரில் இருந்து கீழே இறங்க முயன்றார். ஆனால் கீழே இருந்த பாதுகாவலர்களைக் கண்டார். வெளியேற வழி தெரியாமல், அவர்களிடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினார். பின்னர் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்று தான் தவறு செய்து விட்டதாகவும், இறங்க வழி தெரியவில்லை எனவும் கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் சரியான நேரத்தில் தலையிட்டு அவரை அழைத்துச் சென்றனர்.