IPL 2025: ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள்? – பேச்சுவார்த்தை தீவிரம்!

2025 ஐபிஎல் போட்டிகள் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதட்டம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மே 8 ஆம் தேதி நடந்த பஞ்சாப்-டெல்லி போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. பிசிசிஐ, மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறது.

IPL 2025: ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள்? - பேச்சுவார்த்தை தீவிரம்!

ஐபிஎல் 2025

Published: 

10 May 2025 08:07 AM

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் (IPL 2025) இந்தியா – பாகிஸ்தான் போர் பதட்டம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) நடத்த பிசிசிஐ (BCCI) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2025, ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2025, மே 7 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத அமைப்புகள் மீது இந்தியா அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தியாவுக்கு திருப்பி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்துவதால் இருநாடுகளிடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல்

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நிலைமையை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

2025, மே 8 ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டி நடந்துக் கொண்டிருக்கும்போது எல்லையில் மிகவும் பதட்டமான சூழல் நிலவியது. பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதலுக்கு முயன்றதால் முன்னெச்சரிக்கையாக மைதானத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு ரசிகர்கள்,வீரர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இரு அணியைச் சேர்ந்த வீரர்களும் வந்தே பாரத் சிறப்பு ரயில் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தம்


இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை 57 போட்டிகள் முடிவடைந்துள்ளது. 58வது போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியையும் சேர்த்து மொத்தம் 74 போட்டிகள் என்ற நிலையில் இன்னும் 17 போட்டிகள் நடக்க வேண்டியிருக்கிறது. ஐபிஎல் தொடர் முற்றிலும் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதற்கு காரணம், மீதமிருக்கும் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு, இது தொடர்பாக அந்நாட்டு அரசு மற்றும் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற்று வந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் வசிப்பதால் அவர்களின் நம்பிக்கையை கெடுக்காத வகையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை நடத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது அந்நாட்டுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே ஐசிசி டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி 2025, ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.