பேசிக்கொள்ளும் இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள்… கைகுலுக்காமல் இருப்பது இதற்காக தான் – இங்கிலாந்து வீரரின் பேச்சால் சர்ச்சை
IND vs PAK No Handshake Policy : இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலாஸ்டேர் குக், இந்தியா - பாகிஸ்தான் அணி வீரர்களும் மைதானத்தில் கைகுலுக்கவில்லை என்றாலும் மைதானத்திற்கு வெளியே இரண்டு அணிகளும் சர்வ சாதாரணமாக பேசிக்கொள்கிறார்கள் என கேள்விப்பட்டேன் என்று பேசியுள்ளது சரச்சையாகியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் சர்ச்சை
இந்தியா – பாகிஸ்தான் (Pakistan) இடையிலான போட்டி என்றாலே அது விளையாட்டு என்பதைத் தாண்டி அரசியல் மற்றும் உணர்வுப்பூர்வமாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த 2025 ஆம் ஆண்டு பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்திய அணியினர் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் இருந்து வருகின்றனர். இது பெரும் விவாதமாக மாறியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடங்கி தற்போது டி20 உலகக்கோப்பை வரையிலும் இந்த நடைமுறை தொடர்கிறது. டி20 உலகக்கோப்பை போட்டியிலும் டாஸ் போடும் நிகழ்வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கவில்லை. இது உலக கிரிக்கெட் வீரர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டனின் சர்ச்சை கருத்து
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலாஸ்டேர் குக் இந்த நடைமுறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், இரண்டு அணி வீரர்களும் மைதானத்தில் கைகுலுக்கவில்லை என்றாலும் மைதானத்திற்கு வெளியே இரண்டு அணிகளும் சர்வ சாதாரணமாக பேசிக்கொள்கிறார்கள் என கேள்விப்பட்டேன். அப்படி என்றால் இதுவெறும் காட்சிக்காக தானா? என கேள்வி எப்பியுள்ளார். இந்த கருத்தை அவர் ஸ்டிக் டு கிரிக்கெட் என்ற பாட்காஸ்டில் பகிர்ந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் மைக்கேல் வோகன், டேவிட் லாய்டு, பில் டஃப்னெல் உள்ளிட்ட முன்னாள் இங்கிலாந்து வீரர்களும் பங்கேற்றனர்.
குக் கூறிய கருத்து உண்மையா என இதுவரை யாரும் தெளிவுபடுத்தவில்லை. ஆசிய கோப்பை தொடங்கி தற்போது டி20 உலகக்கோப்பை வரையிலும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியினரும் கைகுலுக்கவில்லை. குறிப்பாக டாஸ் நிகழ்வின்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான அஹா ஆகியோர் போட்டிக்கு முன்னும், பின்னும் கைகுலுக்காமல் கடந்து சென்றனர். இது மிகப்பெரிய அரசியலாகவும் பார்க்கப்பட்டது.
கொழும்புவில் நடைபெற்ற இந்த குரூப் ஏ போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்தது. இந்திய அணியின் சார்பில் இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்து இந்திய அணியை 175 ரன்கள் என்ற இலக்கை அடைய பெரிதும் உதவினார். மேலும், பந்துவீச்சை பொறுத்தவரை ஹார்திக் பாண்ட்யா, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் பாகிஸ்தான் அணியால் 114 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் அணியினர் கைகுலுக்காமல் இருப்பது அரசியலாக பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலாஸ்டேர் குக் பேசியிருக்கும் கருத்து, அது வெறும் போட்டிக்காக மட்டும்தானா என்ற கேள்வியை ரசிகர்களிடம் எழுப்பியுள்ளது.