Vastu Tips: வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க வாஸ்து டிப்ஸ் இதோ!
வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க, பிரதான நுழைவாயிலை சுத்தமாகவும், குப்பைகள் இல்லாமலும் வைக்க வேண்டும். தேவையற்ற பொருட்களை அகற்றி, வெளிர் வண்ணச் சுவர்கள், செடிகள், போதுமான வெளிச்சம் மற்றும் மகிழ்ச்சியான படங்கள் வைப்பது நல்லது என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

வாஸ்து டிப்ஸ்
வாழ்க்கையில் நம்மை சுற்றில் எப்போதும் பாசிட்டிவான எண்ணங்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கும். அதற்காக என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டே இருப்போம். நம்முடைய மனம் தூய்மையாக இருந்தால் மட்டும் பாசிட்டிவ் எண்ணம் வந்து விடுமா என்றால் இல்லை என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. இடம் பொருள் ஏவல் என்பது போல நாம் இருக்கும் இடம் பாசிட்டிவ் எண்ணங்களுக்கான மையமாக திகழ்கிறது. வாஸ்து சாஸ்திரத்தில் இவை அனைத்தும் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி நாம் இருக்குமிடத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அது எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்கி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படியான நிலையில் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதன் மூலம் சில பலன்களைப் பெறலாம் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.
நேர்மறை ஆற்றலை அதிகரிக்க என்ன செய்யலாம்?
- பிரதான நுழைவாயில் சுத்தம்: ஒரு வீடு எங்கிருந்து தொடங்குகிறது என கேட்டால் அதன் பிரதான நுழைவு வாயில் என குறிப்பிடலாம். அதன் வழியாகவே நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைகிறது. எனவே எப்போதும் அந்தப் பகுதியை எப்போதும் சுத்தமாகவும், பழைய பொருட்கள் அல்லது குப்பைகள் இன்றி காலியாகவும் வைத்திருப்பது முக்கியமானதாகும். எக்காரணம் கொண்டும் பழைய காலணிகள், குப்பைகள் அல்லது உடைந்த பொருட்களை அங்கே வைக்க வேண்டாம். இது குடும்ப உறவில் விரிசலை உண்டாக்கும்.
- குப்பைகளை அகற்றுதல்: வீட்டில், குறிப்பாக ஹாலில் குவிந்துள்ள தேவையற்ற மற்றும் பழைய பொருட்கள், உடைந்த அல்லது கீறல் விழுந்த போட்டோ பிரேம்கள் உள்ளிட்டவை எதிர்மறை சக்தியைக் கொண்டு வரும் என நம்பப்படுகிறது. இவற்றை அகற்றுவது வீட்டில் ஆற்றல் ஓட்டத்தை மேம்படுத்தும் என சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் புதிய புதிய உறவுகள் இணைய வேண்டும் என்றால் இதனை பின்பற்ற வேண்டும்.
- சுவர் வண்ணங்கள்: வீட்டின் சுவர்களுக்கு எப்போதும் வெளிர் வண்ணங்களைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மஞ்சள் மற்றும் பச்சை போன்ற வண்ணங்கள் நேர்மறையான சூழ்நிலையை உருவாக்கும் என சொல்லப்படுகிறது. அவை அமைதி மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக உள்ளது. அத்தகைய சூழல் பாசிட்டிவான சூழலை உருவாக்கும்.
- செடிகள் வளர்க்கவும்: வீட்டில் சில செடிகளை வளர்க்கலாம். இதன் மூலம் இயற்கையான ஆற்றலையும் உயிர்ச்சக்தியையும் பெற முடியும். இது வீட்டுச் சூழலை புத்துணர்ச்சியால் நிரப்புகிறது. செடிகள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கின்றன, மேலும் உங்களைச் சுற்றியுள்ள மக்களிடையே நேர்மறை அதிர்வுகளையும் அதிகரிக்கின்றன.
- சூரிய ஒளி: நாம் வசிக்கும் வீடு அல்லது பணி செய்யும் இடம் ஆகியவை எப்போதும் பிரகாசமாகவும், நல்ல வெளிச்சத்துடனும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இருட்டு எதிர்மறை சக்தியை அதிகரிக்கும். இரவில் கூட வீட்டில் சிறிது வெளிச்சம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது தெளிவையும் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளையும் வழங்கும்.
- மகிழ்ச்சியான படங்கள்: மகிழ்ச்சியான தருணங்களின் படங்கள் மற்றும் புகைப்படங்களை வீட்டில் நம் பார்வை படும் இடத்தில் வைக்க வேண்டும். நீங்கள் தனியாக இருக்கும் புகைப்படங்களுக்குப் பதிலாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் இடம் பெறுவது உறவுகளை மேம்படுத்தும். இந்த சிறிய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது.
(வாஸ்து சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)