Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vastu Tips: வடக்கு பார்த்த வீட்டில் பின்பற்ற வேண்டிய வாஸ்து டிப்ஸ்!

வடக்கு நோக்கிய வீடுகள் வாஸ்து சாஸ்திரப்படி மங்களகரமானவை எனக் கருதப்படுகின்றன. செல்வம், செழிப்பு ஆகியவற்றை ஈர்க்கும். ஆனால், வடக்கு, வடகிழக்குப் பக்கங்களில் மலைகள், உயரமான கட்டடங்கள் இருந்தால் பிரதான வாசல் வேறு திசையில் அமைய வேண்டும். வடக்குப் பக்கத்தில் படிக்கட்டுகளைத் தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

Vastu Tips: வடக்கு பார்த்த வீட்டில் பின்பற்ற வேண்டிய வாஸ்து டிப்ஸ்!
வாஸ்து டிப்ஸ்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 24 Apr 2025 16:17 PM IST

நம்முடைய கட்டடக்கலையானது வாஸ்து சாஸ்திரத்தை (Vastu Shastra) அடிப்படையாகக் கொண்டது. மனித வாழ்க்கையை வழிநடத்துவதில் எப்படி ஜோதிட சாஸ்திரங்கள் (Astrology) மிக முக்கியமானவையாக உள்ளதோ, அதேபோல் வாஸ்துவும் உள்ளது. நிலத்தை அடிப்படையாக கொண்ட வாஸ்துவில் கட்டங்கள் தொடங்கி அதன் உள்ளே இருக்கும் பொருட்கள் வரை எப்படி இருக்க வேண்டும் என சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஸ்து என்பது தனிநபர் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் பலரும் வாஸ்து சாஸ்திரத்தை தீவிரமாக பின்பற்றுகின்றனர். அந்த வகையில் நாம் இந்த கட்டுரையில் வடக்கு பார்த்த திசையில் வீடு அமைந்திருந்தால் என்னென்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பது பற்றிக் காணலாம்.

வடக்கு நோக்கிய வீடு என்றால் பலருக்கும் குழப்பமாக இருக்கலாம். வீடு இருக்கும் திசை வடக்காக இருந்தாலும் சில வீட்டில் வாயிற்கதவு வேறு திசையில் இருக்கும். அதனால் வடக்கு பார்த்த வீடு என்பது பிரதான வெளி நுழைவாயில் அல்லது பிரதான வாசற்கதவு வடக்கு திசையை நோக்கி இருக்கும் இடத்தை குறிப்பதாகும்.

நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும்

வாஸ்துப்படி வடக்கு திசையானது செல்வம், பணப்புழக்கம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் ஆற்றலுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. மேலும் வடக்கு நோக்கிய வீட்டில் நாள் முழுவதும் ஏராளமான சூரிய ஒளி படும் என்பதால் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.  அதேசமயம் சாஸ்திரங்களின்படி வடக்கு திசை செல்வத்தின் கடவுளான குபேரனால் ஆளப்படுவதாக நம்பப்படுகிறது. எனவே வடக்கு நோக்கிய வீடு மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த வகையான வீடுகளில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சி, குழந்தைபேறு, செல்வ வளம் ஆகியவை கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வடக்கு நோக்கிய வீட்டின் நன்மைகளை உறுதி செய்ய மலைகள், உயரமான கட்டிடங்கள் அல்லது கோபுரங்கள் போன்றவை வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்குப் பக்கத்தில் இருந்தால் அங்கு வேறு திசையில் பிரதான வாசற்கதவை வைக்கவும். காரணம் இவை சூரிய ஒளியை தடுத்து வீட்டில் எதிர்மறையான எண்ணங்கள் பரவ காரணமாகி விடும் என நம்பப்படுகிறது.

படிக்கட்டுகள் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும்

மேலும் வடக்கு வாசல் உள்ள வீட்டில் ஜன்னல்கள் கிழக்கு திசையில் அமைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். வடகிழக்கு, வடகிழக்கின் கிழக்கு அல்லது வடகிழக்கின் வடக்கு திசைகளில் கூட அமையலாம். ஆனால் எதிர்மறையாக தெற்கில் வைக்கக்கூடாது. வீட்டில் இரண்டு வாசல் இருந்தாலும் அவை ஒரே நேர்கோட்டில் அமையக்கூடாது. வடக்குப் பக்கத்தில் படிக்கட்டுகள் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அது தடைகளை ஏற்படுத்தும். வடக்கு வாசல் உள்ள வீட்டில் வடமேற்கு, மேற்கு, தெற்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் படிக்கட்டுகள் வைக்கலாம்.

வடக்கு நோக்கிய வீட்டினால் எப்போதும் அங்கு நேர்மறை ஆற்றல் ஓட்டம், மகிழ்ச்சி மற்றும் அமைதி , ஆன்மீக வளர்ச்சி, செல்வ வளம், நல்ல ஆரோக்கியம் ஆகியவை இருக்கும் என நம்பப்படுகிறது.

(இணையத்தில் பதிவாகும் வாஸ்து தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த அறிவியல் விளக்கமும் இல்லை. டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)