திருப்பதியில் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு.. 3 நாட்களுக்கு ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் ரத்து – தேவஸ்தானம் அறிவிப்பு..
TTD Srivani Ticket Cancellation: திருப்பதியில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதன் காரணமாக ஸ்ரீவாணி ஆஃப்லைன் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருப்பதி கோயிலில் ரூபாய் 10,000 நன்கொடை வழங்கினால் அனுமதிக்கப்படும் ஸ்ரீவாணி விஐபி ஆஃப்லைன் டிக்கெட் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
திருப்பதி, டிசம்பர் 26, 2025: திருமலா – திருப்பதி தேவஸ்தானம் தரப்பில், டிசம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களுக்கு ஸ்ரீவாணி ஆஃப்லைன் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, பிரம்மோற்சவம், மார்கழி மாதம், வைகுண்ட ஏகாதசி காலங்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகும். அந்த வகையில், வரக்கூடிய டிசம்பர் 30, 2025 அன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது.
அதே சமயத்தில், தற்போது அரையாண்டு விடுமுறை என்பதால் பலரும் குடும்பத்தினருடன் வருகை தந்து திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக, திருப்பதியில் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் காணப்படுகிறது.
மேலும் படிக்க: வைகுண்ட ஏகாதசி: ஒருநாள் விரதத்திற்கு இவ்வளவு பயன்களா? கண்விழிப்பது எப்போது?
திருப்பதியில் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு:
இது ஒரு பக்கம் இருக்க, கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் என தொடர்ச்சியான விடுமுறை காரணமாக திருப்பதியில் கூட்டம் அலைமோதுகிறது. நேற்றைய தினம் திருப்பதி காம்ப்ளக்ஸ் சர்வதரிசன டோக்கன் வாங்க மக்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர். டோக்கன் தீர்ந்துவிட்டதால், வேறு கவுண்டரில் இருந்து தரிசன டோக்கன் வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களை வரிசையில் ஒழுங்குபடுத்தினர். சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க: வைகுண்ட ஏகாதசி – விரதம் இருக்கப்போறீங்களா? அப்போ இந்த தவறுகளை செய்யாதீர்கள்
திருப்பதி ஸ்ரீவாணி ஆஃப்லைன் டிக்கெட் ரத்து:
திருப்பதியில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதன் காரணமாக ஸ்ரீவாணி ஆஃப்லைன் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருப்பதி கோயிலில் ரூபாய் 10,000 நன்கொடை வழங்கினால் அனுமதிக்கப்படும் ஸ்ரீவாணி விஐபி ஆஃப்லைன் டிக்கெட் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக திருமலா–திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களிலும் இந்த ஆஃப்லைன் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், வரக்கூடிய டிசம்பர் 30ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ள நிலையில், முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட் உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஜனவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை டிக்கெட் இல்லாதவர்களுக்கும் சொர்க்கவாசல் வழியாக செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவித்தார்.