திருச்செந்தூர் போக முடியலையா? – ஆன்லைன் தரிசனம் முன்பதிவு வழிமுறைகள்!
திருச்செந்தூர் முருகன் கோயிலின் கும்பாபிஷேகத்திற்குப் பின்னர், அதிகரித்த பக்தர்கள் கூட்டத்தைச் சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆன்லைன் மூலம் தரிசனம், அர்ச்சனை முன்பதிவு செய்யும் வழிமுறைகளும் நடைமுறையில் உள்ளது. hrce.tn.gov.in அல்லது https://tiruchendurmurugan.hrce.tn.gov.in மூலம் அர்ச்சனை, மண்டல பூஜை போன்ற சேவைகளை முன்பதிவு செய்யலாம்.

திருச்செந்தூர் முருகன்
இந்து மதத்தில் தமிழ் கடவுளாக கொண்டாடப்படுவன் முருகப்பெருமான் (Lord Murugan). இவருக்கு ஆறுமுகங்கள் இருப்பதாக ஐதீகமாக உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் முருகனுக்கு அறுபடை வீடுகளும் உள்ளது. இப்படியான நிலையில் முருகப்பெருமான் உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து கோயில்களிலும் தனி சன்னதி கொண்டு பல்வேறு ரூபங்களில் அருள்பாலிக்கிறார். அதேபோல் முருகனுக்கு என திரும்பும் திசையெங்கும் பல்வேறு பெயர்களில் தனிக்கோயில்களும் உள்ளது. இப்படியான நிலையில் முருகனின் இரண்டாம் படை வீடாக அறியப்படுவது திருச்செந்தூராகும் (Tiruchendur). தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடம் கடற்கரை சார்ந்த ஸ்தலமாகும். மற்ற அறுபடை வீடுகள் எல்லாம் குன்று, மலை மீது இருக்க திருச்செந்தூர் மட்டும் தனித்து கடல் பரப்பில் அமைந்துள்ளது. அதனால் பக்தர்களுக்கும் திருச்செந்தூர் மீது அளவுகடந்த பக்தி உள்ளது.
அலைமோதும் மக்கள் கூட்டம்
பொதுவாக திருச்செந்தூருக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர். ஆனால் தகவல் தொடர்பு, தொழில்நுட்ப வசதி பெருகி விட்ட நிலையில் இந்த கோயில் பற்றி பல்வேறு ஆன்மிக அன்பர்களும் பல்வேறு விதமான தகவல்களை வழங்கி வருகின்றனர். அதனால் ஆயிரக்கணக்கில் வந்த கூட்டம் தற்போது நாள்தோறும் லட்சக்கணக்கில் மாறி விட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், திருச்செந்தூர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஆகியவை எடுத்து வருகின்றன.
கடந்த 2025, ஜூலை 7ம் தேதி தான் திருச்செந்தூரில் வெகுவிமரிசையாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் நிலையில் ஆவணி திருவிழா வரும் என்பதால் திருச்செந்தூரில் 40 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை நடக்கும் என கூறப்பட்டுள்ளது.
Also Read: Tiruchendur Temple: திருச்செந்தூர் கோயில் கோபுரத்தில் இத்தனை சிறப்புகளா?
ஆன்லைன் மூலம் தரிசனம் செய்ய வழிமுறைகள்
இப்படியான நிலையில் பலராலும் இன்றைய நாளில் சாதாரணமாக திருச்செந்தூருக்கு சென்று வழிபட முடிவதில்லை. அதனால் கவலைகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. மாறாக திருச்செந்தூர் சென்றால் குறைந்தது 4 மணி முதல் அதிகப்பட்சம் 8 மணி நேரம் வரை சாமி தரிசனம் செய்ய ஆகிறது என செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இப்படியான நிலையில் வீட்டில் இருந்தே பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம், அர்ச்சனை உள்ளிட்டவற்றிற்கு முன்பதிவு செய்யும் வழிமுறைகளும் வந்து விட்டது.
Also Read: திருச்செந்தூர் முருகனின் தாய் வீடு எந்த கோயில் தெரியுமா?
- அதன்படி தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கமான www.hrce.tn.gov.in அல்லது https://tiruchendurmurugan.hrce.tn.gov.in செல்ல வேண்டும்.
- அதில் ‘திருக்கோயில் முன்பதிவு சேவைகள்’ என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால் கட்டண / நன்கொடை சேவைகள் என்பதை தேர்வு செய்யவும்
- இதில் ஒவ்வொரு மாவட்டமும், அதில் உள்ள கோயிலும் காட்டப்படும். அதன்படி தூத்துக்குடி மாவட்டம் தேர்வு செய்து அதில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை கிளிக் செய்யவும்.
- இப்போது அஷ்டோத்திர அர்ச்சனை (ஆன்லைன்), மண்டல பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை (ஆன்லைன்), சண்முகர் அர்ச்சனை, அன்னை தமிழ் அர்ச்சனை (ஆன்லைன்) ஆகிய ஆப்ஷன்கள் காட்டும்.
- இதில் உங்களுக்கு வேண்டியவற்றை கிளிக் செய்து தேவையான பணம் செலுத்தலாம். இந்த முறையில் அனைத்திற்கும் வீட்டில் புக் செய்து நேரடியாக சென்று தரிசிப்பது போல இருக்கும் என சொல்லப்படுகிறது.
- ஒவ்வொரு முன்பதிவு முறையும் தரிசனம் செய்யும் தேதியில் இருந்து முந்தைய நாள் மாலை 5 மணிக்கு நிறுத்தப்படும். இதற்கான அனுமதி சீட்டுடன் தரிசனம் செய்யபோகும்போது அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜை நடைபெற்று வருவதால் இதில் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் பழைய சேவைகள் தொடங்கும்போது அதில் நேரம் கூட நாம் தேர்வு செய்ய முடியும்.