தை அமாவாசை 2026: விரத முறை, ஆண்கள், பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்..
தை அமாவாசை நாளில் செய்யப்படும் முன்னோர் வழிபாட்டில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உரிய தனித்தனி நியதிகள் உள்ளன. இந்த நடைமுறைகளை சரியாக புரிந்து கொண்டு கடைப்பிடிப்பது மிக முக்கியமானது. ஒருவர் இறந்து சில நாட்களே ஆனாலும், அடுத்த அமாவாசை வந்துவிட்டால், அந்த அமாவாசையிலேயே முன்னோர் வழிபாடு செய்வது நியதியாகும்.
தை அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு புனித நாளாகக் கருதப்படுகிறது. எத்தனை நல்ல காரியங்களையும், எத்தனை தெய்வ வழிபாடுகளையும் நாம் செய்தாலும், அவற்றை முன்னோர் வழிபாட்டிற்குப் பிறகே தொடங்க வேண்டும் என்பதே நம் பாரம்பரிய மரபாக இருந்து வருகிறது. உதாரணமாக, திருமணம் போன்ற முக்கியமான சுப நிகழ்வுகளை எடுத்துக்கொண்டால், தை மாதம் கல்யாண காலமாக இல்லாவிட்டாலும், திருமணம் நடைபெறுவதற்கு முன் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது கட்டாயமாகக் கருதப்படுகிறது. முன்னோர் வழிபாட்டுக்குப் பிறகு குலதெய்வத்தை வணங்கி, அதன் பின்னரே இஷ்ட தெய்வ வழிபாடு செய்து திருமணச் சடங்குகள் தொடங்கப்படுகின்றன. இதன் மூலம், வாழ்க்கையின் எந்த முக்கிய நிகழ்விலும் முன்னோர் வழிபாடு முதன்மை பெறுவதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : தை அமாவாசை 2026: யார் என்ன செய்ய வேண்டும்? விரத முறை.. முழு விவரம்!!
முன்னோர்களை நாம் ஏன் வழிபட வேண்டும்?
முன்னோர்களை நாம் ஏன் வழிபட வேண்டும் என்ற கேள்விக்கு விடை மிக எளிமையானது. இன்று நாம் வாழும் வாழ்க்கைக்கும், நாம் பெற்ற நலன்களுக்கும் அடிப்படையானவர்கள் நம் முன்னோர்களே. அவர்களின் உழைப்பும், தியாகமும் இல்லையெனில், இன்றைய நிலை சாத்தியமாக இருக்காது. ஆகவே, அவர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு ஆன்மீகச் செயல் தான் முன்னோர் வழிபாடு. இந்த முன்னோர் வழிபாட்டில், தை அமாவாசை மிகுந்த சிறப்பைப் பெறுகிறது. அனைவராலும் எளிதாகக் கொண்டாடக்கூடியதும், ஆழ்ந்த ஆன்மீக அர்த்தம் கொண்டதுமான இந்த நாள், முன்னோர்களை நினைத்து நன்றியுடன் வழிபட ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி நியதி:
இந்த தை அமாவாசை நாளில் செய்யப்படும் முன்னோர் வழிபாட்டில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உரிய தனித்தனி நியதிகள் உள்ளன. இந்த நடைமுறைகளை சரியாக புரிந்து கொண்டு கடைப்பிடிப்பது மிக முக்கியமானது. ஒரு ஆண் மகனுக்கு, தந்தை அல்லது தாய் இருவரும் இல்லாவிட்டாலும், ஒருவரே இல்லாவிட்டாலும், அமாவாசை விரதத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும். தாய் உயிருடன் இருந்தாலும், தந்தைக்காக; தந்தை உயிருடன் இருந்தாலும், தாய்க்காக – ஒரு மகன் இந்த விரதத்தை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். சிறுவயதில் தந்தையை இழந்தவர்களும், தந்தையாக இருந்து இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
இறந்து சில நாட்களே ஆனாலும் வழிபடலாம்:
ஒருவர் இறந்து சில நாட்களே ஆனாலும், அடுத்த அமாவாசை வந்துவிட்டால், அந்த அமாவாசையிலேயே முன்னோர் வழிபாடு செய்வது நியதியாகும். நாட்களின் எண்ணிக்கை முக்கியமல்ல; நினைவுதான் முக்கியம். ஆனால், தந்தை மற்றும் தாய் உயிருடன் இருக்கும் நிலையில், பெரியப்பா, சித்தப்பா போன்றவர்களுக்காக ஆண் மகன் அமாவாசை விரதம் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்களுக்காக நினைவு படையல் அல்லது தர்மம் செய்வது போதுமானதாகும்.
Also Read : வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு.. கடைபிடிக்க வேண்டிய ஆன்மிக விஷயங்கள்!
பெண்களுக்கான விதிமுறைகளில் குழப்பம்:
பெண்களுக்கான விதிமுறைகளில் அதிக குழப்பம் காணப்படுகிறது. கணவர் உயிருடன் இருக்கும் வரை, ஒரு பெண் யாருக்காகவும் எள்ளும், தண்ணீரும் இறைக்கக் கூடாது என்பது நியதி. அதனால், தந்தை-தாய்க்கு ஆண் வாரிசு இல்லாத சூழ்நிலையிலும், பெண் இந்த முறையை பின்பற்ற வேண்டியதில்லை. அத்தகைய சூழலில் பெண்கள் செய்ய வேண்டியது – இலை போட்டு படையல் வைப்பது, தர்மம் செய்வது, ஏழைகளுக்கு உணவு வழங்குவது போன்ற நற்காரியங்கள். இதனால் ,எந்த விதமான பாவம் அல்லது சாபம் ஏற்படாது என்பதை மனதில் உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.