Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kolam Procedure: கோலம் போடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?

இந்து மதத்தில் கோலம் என்பது முக்கியமான வழிபாட்டு அங்கமாகும். சரியான முறையில் கோலம் போடுவதற்கான விதிகள் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. சூரிய உதயத்திற்கு முன், சுத்தமான இடத்தில், வலது கையால் கோலம் போட வேண்டும். மேலும் அமாவாசை மற்றும் பித்ரு தர்ப்பண நாட்களில் கோலம் போடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kolam Procedure: கோலம் போடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?
கோலம் போடுதல்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 13 Jun 2025 11:05 AM

ஒரு மதத்தை எடுத்துக் கொண்டால் அதில் சின்ன சின்ன விஷயங்கள் கூட இறை வழிபாட்டில் சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்கும். அந்த வகையில் இந்து மதத்தில் கோலம் போடுதல் (Floor Design) என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. வாசல், பூஜையறை, ஹால் என எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் விசேஷ நாட்களில் கோலம் போடுவது என்பது மரபாக உள்ளது. அதேசமயம் கோலம் போடுவது என்பது அனைவருக்கும் எளிதில் வந்து விடாது. அது ஒரு கலை. சரியான கவனம் இருந்தால் நேர்த்தியான அழகுடன் நாம் அதனை செய்ய முடியும். சிறியதாக நட்சத்திர கோலம் தொடங்கி கம்பி கோலம், புள்ளி கோலம், ரங்கோலி (rangoli Kolam )என விதவிதமான கோல வகைகளும் உள்ளது. இப்படியான நிலையில் அத்தகைய கோலம் போடும்போது நாம் சில விதிகளை கடைபிடிக்க வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.

கோலம் போடும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • கோலமிடுதல் என்பது சூரிய உதயத்துக்கு முன்னதாக இருக்க வேண்டும். அதேபோல் சுண்ணாம்பு பவுடர், அரிசி மாவு பயன்படுத்தி கோலமிட்டு அதனை அலங்கரிக்க காவி, மாட்டுச்சாணம் ஆகியவற்றை பயன்படுத்துவோம். இவற்றில் வெண்மை நிறம் பிரம்மாவையும், மாட்டு சாணத்தின் பசுமை நிறம் விஷ்ணு பெருமாளையும், காவி நிறம் பரமேஸ்வரரையும் குறிப்பதாக அர்த்தமாகும்.
  • முதலில் வீட்டை நன்றாக சுத்தப்படுத்திவிட்டு வாசலில் பசுஞ்சாணம் தெளித்த பிறகு கோலம் போடலாம். ஒருவேளை சாணம் கிடைக்கவில்லை என்றால் வழக்கமான தண்ணீர் பயன்படுத்தலாம். சிலர் கோலம் போட்டு அதன் நடுவில் மாட்டுச் சாணம் பயன்படுத்தி பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். அதன் மேல் பூசணிப்பூ அல்லது பரங்கிப் பூ வைப்பது நன்மை அளிக்கும்.
  • வீட்டின் வாசலிலும், பூஜை அறையிலும் போடப்படும் கோலங்கள் வெவ்வேறு என்பதை உணர வேண்டும். கோலத்தின் தொடக்கமும் முடிவும் ஒரே புள்ளியில் தான் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். கோலம் போடும்போது எக்காரணம் கொண்டும் ஆள்காட்டி விரலை பயன்படுத்தக் கூடாது.
  • அதேபோல் வலது கையால் மட்டுமே கோலமிட வேண்டும். மேலும் குனிந்தபடி நின்று தான் கோலம் போட வேண்டுமே தவிர அமர்ந்து கொண்டு செய்யக்கூடாது. தெற்கு திசையில் நின்று கொண்டோ அல்லது தெற்கு திசையில் முடியும் படியோ கோலமிடாதீர்கள்.
  • மேலும் எப்போதும் வாசற்படியில் கோடுகள் ஒற்றையாக இருக்கக் கூடாது. மேலும் தெய்வீக அடையாளங்களை குறிக்கும் ஐஸ்வர்ய கோலம், நவகிரக கோலம், ஸ்ரீ சக்கர கோலம், ஹ்ருதய தாமரை போன்றவற்றை பூஜையறையில் மட்டுமே போட வேண்டும்.
  • பூஜை அறையில் அரிசி மாவு அல்லது மஞ்சள் பயன்படுத்தலாம். அதேபோல் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாள் மற்றும் முன்னோர் வழிபாட்டில் ஈடுபடும் நாட்களில் கோலம் போடக்கூடாது.
  • கோலம் ஒரு கலை. வழிபாட்டு முறைக்கானது அல்ல. அது நம் மனதில் இறையருளுடன் கூடிய பாசிட்டிவான எண்ணங்களை ஏற்படுத்தக்கூடியது என்பதால் கவனமாகவும், சரியாகவும் செய்ய வேண்டும்.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)