Erwadi Dargah: மத நல்லிணக்கத்தை போற்றும் ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா
ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தர்காவில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான மத நிகழ்வாகும். இது இஸ்லாமியர்களால் மட்டுமல்லாமல் பிற மதத்தினராலும் கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு விழா ஏப்ரல் 29 இல் தொடங்கிய நிலையில் மே 28 வரை நடைபெறுகிறது. சந்தனக்கூடு ஊர்வலம், சிறப்பு பிரார்த்தனைகள் போன்ற நிகழ்வுகள் மிக முக்கியமானதாகும்.

நமது இந்தியா என்பது பல்வேறு மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் ஒரு மதச்சார்பற்ற நாடாகும். இங்கு திரும்பும் திசையெங்கும் அனைத்து மதத்தினரின் வழிபாட்டு தலங்களையும் நம்மால் பார்க்க முடியும். அது மட்டுமல்லாமல் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் ஒரு மதத்தைச் சார்ந்த மக்கள் மற்றொரு மதத்தின் வழிபாட்டு தளங்களுக்கு செல்வதும், அங்கு நடைபெறும் விழாக்களில் பங்கேற்பதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இஸ்லாமிய (Islam) மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மற்ற மதத்தினர் மத்தியிலும் மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா (Erwadi Santhanakoodu Festival). பலரும் இந்த பெயரை கேள்விப்பட்டிருக்கலாம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கலாம். அப்படி என்ன இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் என்பது பற்றி நாம் காணலாம்.
ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள தர்காவில் தான் இந்த சந்தனக்கூடு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அனைத்து ஊர்களிலும் உள்ள தர்காக்களில் சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்படும் என்றாலும் ஏர்வாடி மத நல்லிணக்கத்தை பசைச்சாற்றும் வகையில் இருப்பதால் இன்றைக்கும் புகழ்பெற்று திகழ்கிறது. அங்கிருக்கும் சுல்தான் சையது இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா நாயகம் அவர்களின் கல்லறையை நினைவு கூறும் பொருட்டு ஒரு மாதம் இந்த திருவிழாவானது நடைபெறும்.
இஸ்லாமிய நாள்காட்டியின் 11 வது மாதமான ஜில் ஹயிதா காலத்தில்தான் இந்த திருவிழாவானது நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பல்வேறு மதம் சார்ந்த மக்கள் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள் என்பது சிறப்பானதாகும்.
2025 ஆம் ஆண்டுக்கான திருவிழா
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி வெகு விமரிசையாக தொடங்கியது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா 2025 மே 21ஆம் தேதியான இன்று மாலை தொடங்கி 2025 மே 22ஆம் தேதி அதிகாலையில் நிறைவடையும். அதன்படி இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சி 851 வது சந்தனக்கூடு திருவிழாவாகும். இந்த நிகழ்வு தொடங்கிய நாளிலிருந்து தினமும் அங்கிருக்கும் தர்கா மண்டபத்தில் புனித மௌலிது, ஷரீஃப் மார்க்க அறிஞர்களால் ஓதப்படும்.
இதனைத் தொடர்ந்து 2025 மே 9ம் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வண்ணக் கொடியானது யானை மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தர்காவின் முன்புறம் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இப்படியான நிலையில் இன்று மாலை அலங்கரிக்கப்பட்ட யானை மற்றும் குதிரை முன் செல்ல, தாரை தப்பட்டையுடன், வாணவேடிக்கைகள் சகிதமாக தர்காவிலிருந்து போர்வை எடுக்கும் நிகழ்வு நடைபெறும்.
இதன் பின்னர் நாளை அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜாவீர் நல்லா இப்ராஹிம் தர்காவில் இருந்து சந்தனக்கூடு எடுத்து அலங்கார ரதத்துடன் ஊர்வலம் புறப்படும். பின்னர் அதிகாலை 5.50 மணிக்கு ஊர்வலம் தர்கா வந்தடைந்ததும் சந்தனக்கூடு தர்காவை மூன்று முறை வலம் வரும். அதன் பின்னர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று மக்பராவில் பச்சை மற்றும் பல வண்ண போர்வைகளால் போர்த்தப்பட்டு மல்லிகை பூச்சரங்களால் அலங்கரிக்கப்படும். இதனையடுத்து அதன் மீது சந்தனம் பூசப்படும்.
இந்த திருவிழாவானது வரும் 2025 ஏப்ரல் 28ஆம் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவு பெறும்.. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்துள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மே 22ஆம் தேதி ஆன நாளை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விழாவை காண பல இடங்களில் இருந்தும் மக்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.