Astrology: சந்திர மங்கள யோகம்.. இந்த 6 ராசிக்கு செல்வம் பெருகும்
2025 மே 24, 25, 26 தேதிகளில் செவ்வாய் - சந்திரன் சந்திப்பு ஏற்படுகிறது. இதனால் சந்திர மங்கள யோகம் உண்டாகிறது. மேஷம், மிதுனம், கடகம், துலாம், மகரம், மீனம் ராசிகளுக்கு இது சாதகமானதாக அமையும். சொத்து லாபம், வருமான அதிகரிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம், திருமணம், குடும்ப வாழ்க்கையில் சுபிட்சம் போன்ற பலன்கள் உண்டாகும்.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை கிரக நிலைகள் மிக முக்கியமாக கவனிக்கப்படும் விஷயமாகும். அதில் நடக்கும் மாற்றங்கள் பல எதிர்பாராத நிகழ்வுகளை வாழ்க்கையில் உண்டாக்கும் என சொல்வார்கள். இப்படியான நிலையில்,2025, மே மாதம் 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் செவ்வாய் கிரகத்திற்கும் சந்திரனுக்கும் இடையில் ஒரு ராசி மாற்றம் நிகழ்கிறது. அதாவது செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் சந்திக்கும் போது வருமானம், ஆரோக்கியம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டிற்கும் இடையிலான தொடர்பு சந்திர மங்கள யோகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மேஷம், மிதுனம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி காணலாம்.
- மேஷம்: இந்த ராசியின் அதிபதியான செவ்வாய், நான்காம் வீட்டு அதிபதியாக இருக்கும் சந்திரனுடன் இணைகிறார். இதனால் ராசிக்காரர்களுக்கு சொத்து லாபமும், நில லாபமும் நிச்சயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் சொத்து தகராறுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும். சொந்த வீட்டிற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு இது சாதகமான நேரமாகும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. உடல்நலம் பெரிதும் மேம்படும். குறைந்த முயற்சியில் அதிக வருமானம் பெறுவீர்கள். தாய் வழியில் நிதி ஆதாயம் ஏற்படும்.
- மிதுனம்: இந்த ராசிக்காரர்கள் சந்திர மங்கள யோகத்தால் செல்வத்திற்கும் லாபத்திற்கும் அதிபதியாக மாறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் தொடும் அனைத்தும் தங்கமாக மாறும் காலம் அமையும். பல திசைகளிலிருந்தும் வருமானம் அதிகரிக்கும். வார்த்தைகளின் மதிப்பு உயரும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில் சம்பள உயர்வு தொடர்பான செய்திகள் வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் இருக்கும். பங்குகள் மற்றும் முதலீடுகள் லாபம் கொடுக்கும். நிலுவைப் பணம் கைக்கு வரும்.
- கடகம்: இந்த ராசியின் அதிபதியான சந்திரனுக்கும் பத்தாம் வீட்டு அதிபதி செவ்வாய்க்கும் இடையிலான சந்திப்பு காரணமாக, வேலையில் சுப முன்னேற்றங்கள் உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தொடர்பான செய்திகள் வந்து சேரும். அதிகாரிகளுக்கு உங்களால் பயன் உண்டாகும். பிரபலங்களுடன் லாப ரீதியான தொடர்புகள் உண்டாகும். பங்குகள், முதலீடுகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் மூலம் அதிக லாபம் ஈட்டும் வாய்ப்புள்ளது. தந்தை வழிப் பரம்பரை சொத்துக்கள் கைக்கு வரும்.
- துலாம்: இந்த ராசியின் ஏழாம் மற்றும் பத்தாம் அதிபதிகளாக திகழும் செவ்வாய் மற்றும் சந்திரனுக்கு இடையேயான சந்திப்பு காரணமாக குபேர யோகமும், லட்சுமி யோகமும் ஏற்படுகிறது. இதனால் செல்வம் பல வழிகளில் பெருகும். நல்ல பொருளாதார பின்னணி கொண்ட ஒருவருடன் திருமண உறவு அமையும். சொத்து தகராறு உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்பட்டு மதிப்புமிக்க சொத்து கைக்கு வரும். வேலையில் சம்பளம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான தகவல்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் செயல்பாடு கணிசமாக அதிகரிக்கும்.
- மகரம்: இந்த ராசிக்கு நான்காம் மற்றும் ஏழாம் அதிபதிகளுக்கு இடையே மாற்றம் உண்டாகிறது. இதனால் வருமானத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். வீட்டில் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகலும் வெற்றி பெறும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும் சூழல் வரும். உங்கள் காதல் முயற்சிகளில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். சொத்து தகராறுகள் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும். சமூகத்தில் உயர் வகுப்பினருடன் லாபகரமான உறவுகள் உருவாகும். தொழில், வேலை மற்றும் வியாபாரத்தில் நிலைமை மாறும்.
- மீனம்: இந்த ராசியில் பண அதிபதிகளுக்கும் ஐந்து அதிபதிகளுக்கும் இடையில் ஒரு மாற்றம் உண்டாகிறது. ஆனவே ராசிக்காரர்கள் தொடும் அனைத்தும் தங்கமாக மாறும் காலமாக அமையும். பங்குகள், முதலீடுகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் நிலையான வருமான ஆதாரமாக அமையும். கூடுதல் வருமான ஆதாரங்கள் விரும்பிய பலன்களைத் தரும். வேலை மற்றும் திருமண முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். லாபகரமான தொடர்புகள் உண்டாகும். குழந்தைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
(ஜோதிட ரீதியாக பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)