துணைவேந்தர் நியமன சட்டத்திற்கு இடைக்கால தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Interim Stay on Vice Chancellor Appointment Act | துணைவேந்தர் நியமன சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை, மே 21 : பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை (University Vice Chancellor) நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கிய சட்ட பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் (Chennai High Court) உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக பாஜக நிர்வாகி வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லஷ்மி நாராயணன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கிய நீதிமன்றம்
தமிழகத்தில் துணை வேந்தர்களை நியமிப்பதில் நீண்ட காலமாக சிக்கல் நீடித்து வந்தது. துணை வேந்தர்களை நியமிக்கும் உரிமையை முதலமைச்சருக்கே வழங்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன. துணை வேந்தர்கள் நியமனம் மட்டுமன்றி, மசோதாக்களை நிறைவேற்றாதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆளுநருக்கும், தமிழக அரசுக்கு தொடர் மோதல் நீடித்து வந்தது. இந்த நிலையில், தமிழக அரசு அனுப்பி மசோதாக்களை ஆளுநர் நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருப்பதாக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த பல்கலை கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் அதிகாரம் வழங்கும் மசோதாக்கள் உள்ளிட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து தன்னுடை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து பறித்து தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்
துணை வேந்தர்கள் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்த நிலையில், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜக மாவட்ட நிர்வாகியும், வழக்கறிஞருமான வெங்கடாசலபதி, இந்த விவகாரத்தில் யுஜிசி விதிகளுக்கு புறம்பாக சட்டபிரிவுகள் இருப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கிய சட்ட பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.