திருத்தணி முருகன் கோயில் வழிபாடு.. எவ்வளவு பலன்கள் தெரியுமா?
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள அறுபடை வீடுகளில் ஐந்தாம் கோவிலான திருத்தணி முருகன் கோயிலானது 365 படிகள் கொண்ட புனித ஸ்தலமாகும். இங்கு திருமணத் தடை நீங்கவும், நோய் தீர்வும் வேண்டி பக்தர்கள் வழிபடும் முறை பற்றி ஆன்மிக அன்பர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். அதனைப் பற்றிக் காணலாம்.

திருத்தணி முருகன்
தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மலை மீது சுப்ரமணிய சுவாமி அருள் பாலிக்கிறார். ஒரு ஆண்டின் 365 நாட்களை குறிக்கும் வகையில் இங்கு 365 படிகளை கடந்து தான் நாம் முருகனை காண முடியும். முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாக பார்க்கப்படும் இந்த மலைக்கோயில் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற புனித ஸ்தலமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திருத்தணி முருகன் கோயில் கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொண்டை மண்டலத்தில் மிகவும் முக்கியமான கோயிலாக திகழும் இந்த திருத்தணி முருகன் கோயிலில் நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்கள் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்,
சூரபத்மனை வதம் செய்த பிறகு தன்னுடைய சினத்தை தணிக்க முருகப்பெருமான் வந்து அமர்ந்த மலை என்பதால் இது திருத்தணிகை என அழைக்கப்படுகிறது. இப்படியான இந்த முருகன் கோயிலில் திருமணத்தடை, நோய் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் வந்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
இதையும் படிங்க: Lord Murugan: நான்கு முகங்கள் கொண்ட முருகன்.. இந்த கோயில் தெரியுமா?
திருத்தணியில் இந்த வழிபாடை செய்யலாம்
திருமணத்தடையால் அவதிப்படுபவர்கள் பல்வேறு விதமான பரிகாரங்கள் செய்தும் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் மனதளவில் சோர்ந்து போவார்கள். அவர்கள் திருத்தணி முருகனைத் தொடர்ந்து ஆறு வாரங்கள் சென்று வழிபட்டால் அந்த திருமணத்தடை நீங்கும் என்பது தீராத நம்பிக்கையாக உள்ளது.
அறுபடை வீடுகளில் பாதயாத்திரை சென்று வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் திருச்செந்தூர், பழனி மற்றும் திருத்தணி ஆகிய மூன்று அறுபடை வீடுகளில்தான் பாதயாத்திரை செல்வது பக்தர்களின் வழக்கமாக உள்ளது. அப்படி திருத்தணி முருகனை பாதயாத்திரை சென்று வழிபடுபவர்களின் வாழ்க்கையில் எல்லா விதமான தோஷங்களும் நிவர்த்தி ஆகி நல்லருள் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது
இதையும் படிங்க: திருத்தணி முருகன் கொடுத்த திருப்பம்.. நடிகை சரண்யாவுக்கு நடந்த அதிசயம்!
அதேபோல் தீராத நோயால் அவதிப்படுபவர்கள் கடைசியில் இறைவனிடம் தான் சரணடைந்து தன்னுடைய நோயை தீர்க்க வேண்டும் என வேண்டுவோம். அது நம்பிக்கையின் வெளிப்பாடாக இருந்தாலும் மனதளவில் ஒரு தைரியத்தை நோயுடன் போராடுவதற்கு நமக்கு இறைவன் அளிப்பார் என்பது அசைக்க முடியாத ஐதீகமாக உள்ளது. அப்படியாக திருத்தணி முருகன் கோயிலில் உள்ள குளத்தில் நீராடி திருப்புகழை மனதார முருகனை நினைத்து பாடி நோய் தீர்க்க வேண்டும் என வேண்டினால் நிச்சயமாக முருகனின் அருள் ஆசி கிடைத்து பூரண உடல் நலம் பெறுவோம் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதேபோல் அகத்தியர் இறை வழிபாடு செய்த திருத்தணியில் நாமும் வழிபாடு செய்தால் அதற்கேற்ப பலன்களை பெறலாம் என நம்பப்படுகிறது