சித்ரா பௌர்ணமி.. இந்த 4 இடங்களில் விளக்கேற்றினால் கிடைக்கும் பலன்கள்!
சித்ரா பௌர்ணமி 2025 மே 12 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில், வீட்டின் நான்கு இடங்களில் விளக்கு ஏற்றுவது செல்வம், மகிழ்ச்சி மற்றும் கடன்களில் இருந்து விடுபட உதவும் என நம்பப்படுகிறது. விஷ்ணு, லட்சுமி, அன்னபூரணி தேவியை வழிபடுவதும் மங்களகரமானது எனவும் சொல்லப்பட்டுள்ளது.

சித்ரா பௌர்ணமி
பொதுவாக இந்து மதத்தில் (Hindu Religion) அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. இதில் முழு நிலவு நாள் எனப்படும் பௌர்ணமி தினத்தில் சந்திரன் முழு நிலவாகத் தோன்றும் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமாகும். இத்தகைய நாளில் சந்திர பகவானை பிரார்த்தனை செய்வது மன அழுத்தம் மட்டுமல்லாமல் வாழ்க்கையில் இருந்த பிரச்னைகளுக்கு எல்லாம் நிவாரணம் அளிக்கும் என்பது ஒரு மத ரீதியிலான நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. சாஸ்திரத்தைப் பொறுத்தவரை இந்த நன்னாளில் விஷ்ணு பகவானையும் லட்சுமி தேவியை வணங்குவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இதனால் இருவரின் பரிபூரண ஆசி கிடைக்கப்பதோடு செல்வ வளம் அதிகரிக்கும். நீங்கள் செய்ய பாவங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். கர்ம வினைகள் அகன்று மகிழ்ச்சி பொங்கும் என நம்பப்படுகிறது.
சித்திரை மாதத்தின் முழு நிலவு நாள் புத்த பூர்ணிமா தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சித்ரா பௌர்ணமி (Chitra Pournami 2025) என்ற பெயரில் விசேஷமாக பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு இந்த பண்டிகை மே 12 ஆம் தேதி வருகிறது. இந்த புனிதமான நாளில் வீட்டில் நல்ல நேரம் பார்த்து எளிய பரிகாரத்தைச் செய்தால், வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய பலன்களை அடையலாம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக சித்ரா பௌர்ணமி நாளில், வீட்டில் 4 இடங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுவதன் மூலம் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்றும், கடன்களிலிருந்து விடுபட முடியும் என்றும் ஐதீகமாக உள்ளது. அதனைப் பற்றி நாம் பார்க்கலாம்.
சித்ரா பௌர்ணமி நேரம்
பஞ்சாங்கத்தின்படி, 2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திதி மே 11 அன்று மாலை 6:55 மணிக்கு தொடங்குகிறது. இந்த முழு நிலவு திதியானது மே 12 ஆம் தேதி மாலை 7:22 மணிக்கு முடிவடைகிறது. இத்தகைய சூழ்நிலையில் சித்ரா பௌர்ணமி மே 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
விளக்கு ஏற்ற வேண்டிய இடம் எது?
- பிரதான நுழைவாயில் : சித்திரை மாத பௌர்ணமி தினத்தில் விஷ்ணுவை வழிபடும்போது வீட்டின் பிரதான நுழைவாயிலில் ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் உங்களையும், குடும்பத்தினரையும் சுற்றியிருக்கும் அனைத்து வகையான எதிர்மறை சக்திகளும் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
- துளசி மாடம்: சித்ரா பௌர்ணமி நாளில் நல்ல நேரத்தில் துளசி செடியை வணங்கவும். பின்னர் துளசி மாடம் அருகே நெய் விளக்கு ஏற்றி வைக்கவும். இவ்வாறு செய்வது லட்சுமி தேவியை மகிழ்விக்கும் என்றும், கடன்கள் மற்றும் நிதிப் பிரச்சினைகளில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் விடுபடுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
- பூஜை அறை: சித்திரை பௌர்ணமி நாளில் வீட்டில் தூய்மையை கடைபிடிக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அந்நாளில் வீட்டின் பூஜை அறையிலோ அல்லது பூஜை செய்யப்படும் வழிபாட்டுத் தலத்திலோ ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். இதைச் செய்வதால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும் என்றும், நிதி ஆதாயம் வரும் என்றும் நம்பப்படுகிறது.
- சமையலறை: இந்து மத நம்பிக்கையின்படி சமையலறை வீட்டின் மிக முக்கியமான பகுதியாகும். சமையல் வீட்டில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. அத்தகைய சூழ்நிலையில், இந்த பௌர்ணமி நாளில் நீங்கள் சமையலறையில் ஒரு விளக்கை ஏற்றி வைப்பதால் அன்னபூரணி தேவி மகிழ்ச்சி அடைவார் என்றும், வீட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என்றும் நம்பப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கையின் இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உண்மைகளின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)