வாழ்க்கையில் நல்லா இருக்க ஆசையா? – இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்க!
சாணக்கியர் கூற்றுப்படி, வாழ்வில் சில ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. நிதிநிலை, தனிப்பட்ட உறவுகள், எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றை நண்பர்கள், உறவினர்கள், எதிரிகள் என யாரிடமும் சொல்லக் கூடாது. கணவன், மனைவி இடையேயான நம்பிக்கை மிக முக்கியம் என தெரிவித்துள்ளார்.

சாணக்ய நிதி
வாழ்க்கையில் இன்பம், துன்பம் என இரண்டு விஷயங்கள் மாறி மாறி வரும். அதேசமயம் வெற்றி பெற வேண்டும், நேர்மறையாக சிந்திக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்க வேண்டும் என அனுபவசாலிகள் சொல்லி கேட்டிருப்போம். அதேசமயம் நம் வாழ்க்கையில் உறவினர்கள், நண்பர்கள், கல்வி, பணி என அனைத்து விஷயங்களிலும் சரியானவற்றைப் பின்பற்றினால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு விஷயத்தையும் எல்லோரிடமும் சொல்லக்கூடாது. யாரிடமும் சொல்ல வேண்டும் என்பது பற்றி தத்துவ ஞானி ஆச்சார்ய சாணக்கியர் தெரிவித்துள்ளார். அதாவது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சில விஷயங்கள் எல்லோருக்கும் தெரியவேக்கூடாது. அது உங்கள் பலவீனம், நிதி நிலைமை, தனிப்பட்ட உறவு அல்லது உங்கள் எதிர்காலத் திட்டங்களாக என எதுவாக வேண்டுமாலும் இருக்கலாம். எனவே யாரிடம் எதை சொல்ல வேண்டும், சொல்லக்கூடாது என்பதனைப் பற்றிப் பார்க்கலாம்.
இதெல்லாம் யார்கிட்டேயும் சொல்லாதீங்க
- எல்லாரும் நண்பர்கள் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். வாழ்க்கையில் உண்மையான நண்பர்கள் என்பது நல்ல மற்றும் கெட்ட காலங்களில், சூழ்நிலை எதுவாக இருந்தாலும் உங்களுடன் இருப்பவர்கள்தான் என்பதை உணருங்கள். அத்தகையவர்கள் நீங்கள் சொல்வதை கவனமாகக் கேட்பது மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் உங்களுக்கு சரியான ஆலோசனையையும் வழங்குவார்கள். அத்தகைய நண்பர்கள் வாழ்க்கையில் ஒரு வரம் என்றும் அவருடன் நீங்கள் உங்கள் பிரச்சினைகள், துக்கங்கள், மகிழ்ச்சி மற்றும் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இவர்களை தவிர யாரிடமும் எதையும் சொல்லாதீர்கள்.
- ஒவ்வொரு உறவினரும் உங்கள் நலம் விரும்பிகள் அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். பல நேரங்களில், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது உறவினர்கள் உங்கள் ரகசியங்களை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவதன் மூலம் நீங்கள் அவமானத்தை சந்திக்கவோ அல்லது தீமையை எதிர்கொள்ளவோ அவர்கள் விரும்புகிறார்கள். எனவே, ஒவ்வொரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல், எல்லாவற்றையும் உங்கள் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். எதை சொல்ல வேண்டுமோ அதை தெரிவியுங்கள்.
- எதிரி அல்லது போட்டியாளருக்கு முன்னால் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். ஒருவர் தனது தனிப்பட்ட விஷயங்கள், பலவீனங்கள் அல்லது திட்டங்களை தனது எதிரியுடன் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உங்கள் எதிரி இவற்றை உங்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவார். எனவே, எதிரிக்கு முன்னால் அமைதியாக இருப்பது மிகப்பெரிய பாதுகாப்பாகும்.
- கணவன் மனைவி இடையேயான நம்பிக்கை மிகவும் வலிமையானது. ஒருவர் தனது மனதில் உள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரே நபர் அவரது மனைவி என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறினார். கணவன் மனைவி இடையேயான உறவு நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, கணவன் மனைவி ஒருவருக்கொருவர் வெளிப்படையாக இருக்க வேண்டும். அவர்களின் அனைத்தையும் பகிரலாம்.
- பணியிடத்தில் இருப்பவர்கள் கடந்து போகும் மேகம் போன்றவர்கள். நீங்கள் நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் என்ற கணக்கில் வேலைப் பார்க்கலாம். ஆனால் இடம் மாறுவீர்கள். அப்போது இருந்த தொடர்பு மாறும். எனவே உங்கள் தனிப்பட்ட விஷயம் அனைத்தையும் பகிர வேண்டாம்.
(சாணக்ய நிதி அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)