Vastu Tips: தெற்கு திசையில் இந்த செடிகளை நட்டால் இவ்வளவு பலன்களா?
தெற்கு திசை வாஸ்துவில் எம திசையாகக் கருதப்படுகிறது. ஆனால், சரியான செடிகளை நடுவதால் நேர்மறை ஆற்றல் பெருகும். செம்பருத்தி, ரோஜா, வேம்பு, பலாசு போன்ற செடிகள் தெற்கில் நட்டால், தீய கண், நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். இவை மங்களகரமானவை என சொல்லப்படுகிறது.

வாஸ்து டிப்ஸ்
வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra) என்பது நிலம் சார்ந்த விஷயமாக ஆரம்பத்தில் பார்க்கப்பட்டாலும், அது தற்போது தனி மனித சார்ந்த விஷயமாக உள்ளது. உடுத்தும் உடை தொடங்கி நாம் இருக்கும் அறையின் திசை, அதில் இருக்க வேண்டிய பொருட்கள், என்ன செய்யலாம், செய்யக்கூடாது என வீட்டில் உள்ள ஒவ்வொரு திசைக்கும் அதன் சொந்த சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. அந்த வகையில் வாஸ்துப்படி இந்த திசையில் பொருத்தமான செடிகளை நட்டால், வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படியாக வீட்டின் தெற்கு திசை பெரும்பாலும் எம திசையாகக் கருதப்படுகிறது. இதனால் பெரும்பாலும் அந்த திசையை தவிர்க்கவே முயற்சிப்போம். ஆனால், சரியான செடிகளை தெற்கு திசையில் நட்டால் அது வாழ்க்கையில் அதிர்ஷ்டத்துக்கும், முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் தெற்கு திசையில் எந்த செடிகளை நட வேண்டும் என்பது பற்றிக் காணலாம்.
என்ன செடிகளை நடலாம் தெரியுமா?
பொதுவாக ஒரு நிலத்தின் தெற்கு திசை நெருப்புடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. அதனால் மதிய வேளையில் சூரியனின் ஆற்றல் இந்த திசையில் மிகவும் தீவிரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. எனவே, இந்த திசையில் நிலவும் ஆற்றலை சமநிலைப்படுத்தும் வகையில் தாவரங்களை நட வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது.
உதாரணமாக சூரியன் மற்றும் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடைய செம்பருத்தி மற்றும் ரோஜா போன்ற சிவப்பு நிறத்திலான பூக்கும் தாவரங்களை நட்டால் மிகவும் மங்களகரமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தெற்கு திசை செவ்வாய் மற்றும் சனி கிரகங்களுடன் தொடர்புடையதாகும். இதனால் இந்த திசையில் பலாஷ் அல்லது வேம்பு போன்ற தாவரங்களை நடுவதன் மூலம், இந்த கிரகங்களின் அசுப விளைவுகளை கட்டுப்படுத்தலாம் என்பது ஐதீகமாக உள்ளது.
இதில் செம்பருத்தி மற்றும் வேப்ப மரத்தின் செடிகள் தீய கண் எனப்படும் திருஷ்டி கண்ணில் இருந்து நம்மை பாதுகாத்து மிகவும் பயனுள்ளதாக வாழ்க்கையை மாற்றும் என கருதப்படுகிறது. மேலும் தெற்கு திசையில் இந்த செடிகளை வளர்ப்பதால் வீட்டைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய் பாதிப்புகளும் ஏற்படுவது குறைகிறது.
அதேபோல் அழகுக்காகவும், மருத்துவத்துக்காகவும் பயன்படும் மந்தாரம், வேம்பு போன்ற தாவரங்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் எதிர்மறை ஆற்றலைச் சுத்திகரிப்பவையாகவும் உள்ளது. இதனால் தெற்கு திசை யம திசையாகக் கருதப்பட்டாலும் இந்த தாவரங்களை அங்கு நடுவது ஏகப்பட்ட பலன்களை நமக்கு தந்தருளுகிறது. மேலும் ஜோதிடத்தின்படி தெற்கு திசை முன்னோர்களின் திசையாகக் கருதப்படுகிறது. அங்கு ஒரு செம்பருத்தி அல்லது பாரிஜாத செடியை நடுவது முன்னோர்களின் பாவங்களிலிருந்து நிவாரணம் அளிக்கும் என நம்பப்படுகிறது. முன்னோர்களின் ஆசிகள் நமக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
(வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள தகவல்களுக்கு எந்தவித அறிவியல்பூர்வ விளக்கமும் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)