வாழ்க்கையை வளமாக்கும் அந்தியூர் பத்ர காளியம்மன் கோயில்!
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் 2000 ஆண்டுகள் பழமையான தலமாகும். இக்கோயில் பாண்டிய மன்னர்களால் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாகப்பாம்பு வடிவில் பசுவின் பால் குடித்த காளியம்மன், அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோயில் ராகு தோஷ நிவர்த்திக்கும் பிரசித்தி பெற்றது என ஐதீகமாக உள்ளது.

பத்ர காளியம்மன் கோயில்
பெண் தெய்வமான பராசக்தி மிகவும் முக்கியமான வடிவமாக இருப்பதுதான் காளி என அழைக்கப்படுகிறது. காளி என்பதற்கு காலம் அல்லது கருப்பு என பொருள்படும். அதாவது காலத்தின் பால் பராசக்தி தேவியாகவும் காலியாகவும் கருதப்படுகிறாள் என்பதே உவமையாக சொல்லப்படுகிறது. காளி என்றவுடன் உக்கிரமான தோற்றத்துடன் இருக்கும் என நாம் தெரிவிப்போம். ஆனால் காலி தீங்கு செய்பவர்களுக்கு மட்டுமே முக்கியமான தெய்வமாக காட்சியளிக்கிறாள். இப்படியான நிலையில் இந்தியா முழுவதும் காளி தேவிக்கு ஏராளமான தனி கோயில்கள் உள்ளது. அப்படியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் அமைந்திருக்கும் பத்ரகாளியம்மன் கோயில் வரலாறு பற்றி நாம் இன்று அறிந்து கொள்வோம்.
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில்
இந்த கோயில் ஆனது ஈரோட்டில் இருந்து சரியாக 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்தியூர் பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கிறது. 2000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலை 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த பாண்டிய மன்னர்கள் புரனமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு சான்றாக கோயிலின் கல்வெட்டுகளில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
கொங்கு நாட்டில் பவானி நகரில் இருந்து இருந்து வடக்கு பக்கமாக இந்த காளியம்மன் கோயில் அமைந்திருப்பதால் இவர் வடகரையில் வீற்றிருக்கும் அம்மன் எனவும், பவானி ஆற்றின் வடக்கு பகுதியில் இறுதியான ஊர் என்பதால் அந்தியூர் என பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த பத்ரகாளியம்மன் கோயிலானது தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
கோயிலின் தல வரலாறு
கன்று ஒன்றை ஈன்ற பசு ஒன்று காட்டில் மேய்ந்த போதும் தினசரி பாலின்றி வெற்று மடியோடு வீட்டுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ச்சியாக கவனித்த அதன் உரிமையாளர் ரகசியமாக சென்று பசுவை நோட்டமிட்டார். அப்போது ஒரு புற்று அருகே பசு சென்றபோது ஐந்து தலை நாகம் ஒன்று வெளிப்பட்டு அதன் மடிகளில் உள்ள பாலை குடிக்கும் காட்சியை கண்டு அதிசயித்தார். அன்று இரவு அவரது கனவில் தோன்றிய ஒரு பெண், நான் பத்திரகாளி வந்திருக்கிறேன். உன்னுடைய பசுவின் பால் குடித்து மனநிறைவு அடைந்தேன். என்னை இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடு என கூறியுள்ளார்.
அதன்படி அம்மனின் அருள்வாக்கை ஏற்று அந்த இடத்தில் பக்தர்கள் வழிபட தொடங்கிய கோயில்தான் இன்று மிகப்பெரிய கோயிலாக எழுந்து நிற்கிறது. பத்திர என்ற சொல்லுக்கு இலை, பாதுகாப்பு, அழகிய உருவம் என பொருள் உள்ளது. பத்திரகாளி என்ற சொல்லை சொல்லும் போது அழகிய தோற்றம் உடையவள், மக்களை பாதுகாப்பவள், இலைத்தோடு அணிந்தவள் என சொல்லலாம்.
கோயிலின் சிறப்புகள்
இந்த கோயிலின் கருவறையில் பத்திரகாளி அம்மன் 8 கைகளுடன் மகிஷாசுரமர்த்தினியாக காட்சியளிக்கிறாள். அதன்படி சுடர் விட்டு எரியும் தீ போல தலை, மண்டை ஓட்டில் கிரீடம், எட்டு கைகளில் உடுக்கை, கபாலம், சூலம், கட்கம், விஸ்மய ஹஸ்தம், நாகம், மணி கிண்ணம் ஆகியவையுடன் மகிஷாசுரனின் தலைமேல் கால் வைத்திருக்கும் பாவனை ஆகியவற்றோடு பத்ரகாளி காட்சி கொடுக்கிறாள். இந்த கோயிலில் நடக்கும் அக்னிகுண்டம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் திருமணம் தொடங்கி கல்வி வரை எந்த விஷயமானாலும் அம்மனிடம் வாக்கு கேட்டு செயல்படுத்தும் வழக்கம் இப்பகுதி மக்களுக்கு உள்ளது.
பெண்கள் தங்களுடைய மாங்கல்ய பாக்கியம் நிலைக்க தாலியையே காணிக்கையாக அளிக்கின்றனர். அதேபோல் எப்போதும் மந்தமாக செயல்படுபவர்கள் அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோயிலில் தீர்த்தம் வாங்கி குடித்தால் சுறுசுறுப்பாக செயல்பட முடியும் என நம்பப்படுகிறது. ராகுவின் அதிதேவதையாக காளி விளங்குவதால் வாரத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் வளர்ச்சி, செல்வ வளம் ஆகியவை கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இந்த கோயிலில் சனி தோஷம் பிரச்சனை உள்ளவர்கள் வணங்குவதற்காக வீர ஆஞ்சநேயர் சன்னதியும் இருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் இந்த குண்டம் இறங்குதல் திருவிழா நடைபெறும். அது மட்டுமல்லாமல் சித்ரா பௌர்ணமி, தீர்த்தக் குடவிழா, துர்காஷ்டமி, நவராத்திரி விழா, கார்த்திகை தீபம் ஆகியவையும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். வாய்ப்பு இருப்பவர்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையின் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)