தண்ணீர் கேனில் பெட்ரோல்….? நிபுணர்கள் எச்சரிக்கும் பெரிய அபாயம்
Petrol in Plastic Water Cans: சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில், ஒருவர் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்பி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் போன்ற எரிபொருள்களை சாதாரண பிளாஸ்டிக் கேன்களில் சேமிப்பது கசிவு மற்றும் தீ விபத்து அபாயத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தண்ணீர் கேனில் பெட்ரோல் சேமிப்பு
உலகமே எரிபொருள் தட்டுப்பாட்டைப் பற்றி கவலைப்பட்டாலும், நம் ஊர் ஆட்களுக்கு எப்போதுமே ஒரு ‘தனி ரூட்’ உண்டு என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த காட்சியில், ஒருவர் அசால்ட்டாகத் தனது இருசக்கர வாகனத்தில் 20 லிட்டர் தண்ணீர் கேனை வைத்துக்கொண்டு, பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ‘ஃபுல் டேங்க்’ என்பது போல் கேன் நிறைய பெட்ரோலை நிரப்புகிறார். “சென்னை வரை போகணும், அதான் ஸ்டாக் வைக்கிறேன்” என அவர் சொல்லும் காரணத்தைக் கேட்டுச் சுற்றியிருப்பவர்கள் சிரித்தாலும், இது சிரிப்பிற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பெரும் விபரீதம்.
பாதுகாப்பை மறக்கும் ‘லோக்கல் ஐடியா’
பிளாஸ்டிக் கேன்கள் பெட்ரோலைத் தாங்கும் உறுதி கொண்டவை அல்ல; பெட்ரோலின் வேதிவினையால் பிளாஸ்டிக் உருகி கசிவு ஏற்பட்டால், வண்டியின் இன்ஜின் சூட்டில் அது ஒரு நடமாடும் வெடிகுண்டாகவே மாறிவிடும். இந்த ‘லோக்கல் இன்ஜினியரிங்’ பார்ப்பதற்கு மாஸாகத் தெரிந்தாலும், ஒரு சிறிய தவறு நேர்ந்தால் அது மிகப்பெரிய உயிரிழப்பிற்கு வழிவகுக்கும். கிரியேட்டிவிட்டி காட்ட வேறு பல வழிகள் உள்ளன, ஆனால் உயிர் பாதுகாப்பை ஆபத்துக்கு உள்ளாக்கும் இப்படிப்பட்ட முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எரிவாயு மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு குறித்து மக்கள் கவலை
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியதற்குக் காரணமாக, சமீப காலமாக எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு சில இடங்களில் கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்களும் குறிப்பிடப்படுகின்றன. தமிழகத்தின் சில பகுதிகளில் சில நேரங்களில் சிலிண்டர் விநியோகம் தாமதமாகும் நிலையும், நாட்டின் பல மாநிலங்களில் எரிபொருள் விலை உயர்வும் மக்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிலர் தேவைக்கு அதிகமாக சேமித்து வைக்கும் பழக்கத்திற்குத் திரும்புவது போல தெரிகிறது.
Also read: சிலிண்டர் இல்லாவிட்டாலும் சமையல் செய்யலாம்.. உதவும் மின்சார சாதனங்கள்!
அவசர சேமிப்பு பாதுகாப்புடன் இருக்க வேண்டும்
எரிபொருள் அல்லது சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயத்தில் மக்கள் முன்கூட்டியே சேமிப்பது புரிந்துகொள்ளக்கூடிய விஷயமாக இருந்தாலும், அது பாதுகாப்பு விதிமுறைகளுக்குள் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். பெட்ரோல் போன்ற எரிபொருள்களை வீட்டில் அல்லது வாகனங்களில் தவறான பாத்திரங்களில் சேமிப்பது தீ விபத்து, வெடிப்பு போன்ற பெரிய அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
விழிப்புணர்வே பாதுகாப்பு
சமூக வலைதளங்களில் வைரலாகும் இப்படிப்பட்ட வீடியோக்கள் சில நேரங்களில் நகைச்சுவையாக தோன்றினாலும், அவை உண்மையில் பெரிய அபாயங்களை நினைவூட்டும் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்பட வேண்டும். எரிபொருள் அல்லது கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவது அவசியம். பாதுகாப்பான நடைமுறைகளே உயிரையும் சொத்துகளையும் காப்பாற்றும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.