ஜங்க் ஃபுட் விளம்பரங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Side Effects Of Junk Food Ad : லிவர்பூல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குழந்தைகளின் உடல் பருமனைக் குறைக்க ஆரோக்கியமற்ற உணவு விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை இங்கிலாந்து முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 240 குழந்தைகளிடம் நடத்தப்பட்டிருக்கிறது.

ஜங்க் ஃபுட் (Junk Food) ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நமக்குத் தெரிந்திருந்தும், நாம் ஏன் அதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறோம்? குறிப்பாக குழந்தைகள் (Children) மற்றும் இளைஞர்கள் ஏன் அதிகம் ஜங்க் ஃபுட்டை தேடிச் சென்று சாப்பிடுகிறார்கள்? என்பது ஆச்சரியமளிக்கும் கேள்வி. பொதுவாக எந்த சமூக ஊடகத்தை திறந்தாலும், இந்த வகையான உணவுகளைப் பற்றிய விளம்பரங்களை நம்மால் தவிர்க்க முடியாது. அதன் சுவையால் ஈர்க்கப்படும் நாம் அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி சிந்திப்பதில்லை. இங்கிலாந்தில் (England) நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், ஜங்க் ஃபுட் விளம்பரங்களைப் பார்க்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிக கலோரி உணவுகளை எடுத்துக்கொள்வதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அதிக கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளுக்கான விளம்பரங்களை ஐந்து நிமிடங்கள் மட்டுமே பார்க்கும் குழந்தைகளுக்கு கூட குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏழு முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக கூடுதலாக 130 கலோரிகளை உட்கொள்வது கண்டறியப்பட்டது.
லிவர்பூல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள், ஐரோப்பிய உடல் பருமன் மாநாட்டில் வெளியிடப்பட்டது. குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனைக் குறைக்க ஆரோக்கியமற்ற உணவு விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வானது இங்கிலாந்து முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 240 குழந்தைகளிடம் நடத்தப்பட்டிருக்கிறது.
ஜங்க் ஃபுட் விளம்பரங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்
ஜங்க் ஃபுட் விளம்பரங்களைப் பார்த்த பிறகு, குழந்தைகள் ஒட்டுமொத்தமாக 130 கலோரிகளை அதிகமாக சாப்பிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை இலக்காகக் கொண்ட ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசை வலியுறுத்துவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
குழந்தைகளில் உடல் பருமனை எவ்வாறு குறைப்பது?
- குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமன் இதய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அவர்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க இந்த விஷயங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
- குழந்தைகளின் உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். அவர்களுக்கு வழங்கும் உணவிலோ அல்லது சிற்றுண்டியிலோ இவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- கார்பனேட்டட் குளிர் பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை கட்டுப்படுத்துங்கள். அவற்றில் பெரும்பாலும் கலோரிகள் அதிகமாகவும், ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
- பெரியவர்களுக்குத் தேவையான அளவு உணவு குழந்தைகளுக்குத் தேவையில்லை. எனவே நீங்கள் கொடுக்கும் உணவின் அளவு குறித்து கவனமாக இருங்கள்.
- டிவி, மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றி முன்னால் குழந்தைகளுக்கு உணவளிப்பதைத் தவிர்க்கவும். உணவளிக்கும் போது அவர்களது கவனம் உங்கள் மேல் இருக்க வேண்டும். அதற்கு உரையாடல்தான் சிறந்த வழி.