Chicken Biryani Tips: வீட்டில் சிக்கன் பிரியாணி செய்தால் சொதப்பலா..? இந்த 5 தவறுகளை தவிர்த்தால் சுவை சூப்பர்..!

Perfect Chicken Biryani: வீட்டில் சுவையான சிக்கன் பிரியாணி செய்வதில் பலர் தவறுகள் செய்கிறார்கள். சிக்கனை ஊற வைக்காமல், அரிசியை சரியாக வேக வைக்காமல், தம் போடாமல், வெங்காயத்தை சரியாக வறுக்காமல், அதிக தீயில் சமைப்பது போன்றவை பிரியாணியின் சுவையை கெடுக்கும். இந்த 5 தவறுகளைத் தவிர்த்து, சரியான முறையில் பிரியாணி செய்தால், கடை பிரியாணியை விட சுவையான பிரியாணி வீட்டிலேயே செய்யலாம்.

Chicken Biryani Tips: வீட்டில் சிக்கன் பிரியாணி செய்தால் சொதப்பலா..? இந்த 5 தவறுகளை தவிர்த்தால் சுவை சூப்பர்..!

சிக்கன் பிரியாணி

Published: 

04 May 2025 16:47 PM

பிரியாணி (Biryani) என்பது ஒரு உணவு மட்டுமல்ல, பலருக்கு எமோசன் என்றே சொல்லலாம். அதிலும் சிக்கன் பிரியாணி (Chicken Biryani) என்றால், நம்மில் பெரும்பாலோருக்கு நாக்கில் தண்ணீரை ஊற செய்யும். பெரும்பாலோனர் வீடுகளில் செய்யும் பிரியாணியை விட கடைகளிலும் செய்யும் பிரியாணியை அதிகளவில் விரும்புகிறார்கள். அதற்கு காரணம், வீடுகளில் என்னதான் முயற்சி செய்தாலும் பிரியாணி, கடைகளில் செய்வதுபோல் சுவையை தருவதில்லை என்று பலரது புகார். இருப்பினும், கடைகளில் 2 பிரியாணிகளை வாங்கினால் குறைந்தது 250 முதல் 300 ரூபாய் ஆகிவிடுகிறது. இதற்கு ஒரு கிலோ கறியை வீட்டில் தாராளமாக சாப்பிடலாம் என்பது பலரின் எண்ணம். இந்தநிலையில், வீட்டில் சிக்கன் பிரியாணி செய்யும்போது இந்த 5 தவறுகளை தவிர்த்தால், நீங்கள் கடைகளில் காசுகளை கொட்ட தேவை இல்லை.

சிக்கனை ஊறவைத்தல்:

பிரியாணி செய்யும்போது பலரும் செய்யும் ஒரே தவறு சிக்கன் ஊறவைக்காமல் அப்படியே பாத்திரத்தில் சேர்த்து வேகவைப்பதுதான். குளிர்சாதன் பெட்டியில் இருந்து நேரடியாக சிக்கனை சமைக்கும்போதோ அல்லது ஊறவைக்காமல் அப்படியே பயன்படுத்தும்போதோ, சிக்கனில் இருக்கும் தண்ணீரானது வெளியேறி பிரியாணியை குழைய செய்யும். எனவே, பிரியாணி சமைப்பதற்கு முன், உங்கள் சிக்கனை தயிர் மற்றும் மசாலாப் பொருட்களில் குறைந்தது 1-2 மணி நேரம் ஊற செய்யுங்கள். இது பிரியாணிக்கு நல்ல சுவையை கொடுக்கும்.

அரிசியை சரியான அளவில் வேகவைத்தல்:

பிரியாணியின் முதுகெலும்பு அரிசிதான். பிரியாணி சுவையாக இருக்க வேண்டுமென்றால், அதை எப்படி சமைக்கிறீர்கள் என்பதை பொறுத்தது. பிரியாணி சமைக்கும்போது, சிலர் அரிசியை அதிக நேரம் வேக விடுகிறார்கள், சிலர் குறைவாக வேக விடுகிரார்கள். இதனால், பிரியாணி கடினமாகவும் அல்லது மிகவும் மென்மையாகவோ மாறிவிடும். அரிசி 70 சதவீதம் வேகும் வரை ஓரளவு வேகவைக்க வேண்டும். அதாவது, ஒரு அரிசியை எடுத்து நசுக்கி பார்க்கும் அளவிற்கு இருந்தால் போதுமானது. இதன்பிறகு, தம் போடும்போது சிக்கன் மற்றும் மசாலாவுடன் அடுக்கடுக்காக அடுக்கி வேகவைத்தால், அரிசி சரியான பதத்தில் வென்றுவிடும்.

தம் போடுவது கட்டாயம்:

பலரும் பிரியாணியை பிரியாணிபோல் செய்யாமல், புலாவ் மாதிரி விசில் விட்டு குக்கரில் வேக வைக்கிறார்கள். இது பிரியாணியின் சிறப்பம்சத்தை கெடுக்கிறது. பிரியாணி செய்யும்போது பாதி வேகவைத்த அரிசி, ஊறவைக்கப்பட்ட சிக்கன் போன்றவற்றை மெல்ல மெல்ல அடுக்கி தம் போடும்போது அதன் சுவை மெதுவாகவும், முழுவதுமாகவும் வெளியேறும். இந்த முறைகளை நீங்கள் தவிர்த்தால், அது பிரியாணியாக இல்லாமல், சிக்கன் ரைஸாக மாறும்.

வெங்காயத்தை சரியாக வறுத்தல்:

பிரியாணியில் உள்ள ஒவ்வொரு மூலப்பொருளும் சுவை மற்றும் மணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி, வெங்காயமும் முக்கிய இடத்தை பிடிக்கிறது. வெங்காயத்தை வறுக்கும்போது, அதில் சரியான கவனத்தை செலுத்தாமல் தீய விடுகிறார்கள். இதை பயன்படுத்தும்போது பிரியாணியின் சுவை கெடும். வெங்காயம் மொறுமொறுப்பாகவும், தங்க பழுப்பு நிறமாகவும் மாறும் வரை மெதுவாக வறுக்க வேண்டும். இந்த வெங்காயம் பிரியாணிக்கு இனிப்பு, மொறுமொறுப்பு மற்றும் சுவையை கூட்டும்.

குறைவான தீயில் சமைத்தல்:

பிரியாணி சமைக்கும்போது அவசரம் என்பது கூடவே கூடாது. பிரியாணியை அதிக தீயில் வைத்து சமைக்கும்போது அடிபிடித்துவிடும். எனவே, அனைத்தையும் சேர்த்தபிறகு, மூடிப்போட்டு மெதுவான தீயில் வேகவிடுங்கள். இப்படி செய்வதன்மூலம், பிரியாணியில் அனைத்து மசாலாவின் சுவையும் இறங்கி அதிரி புதிரி ருசியை தரும்.