ஒரு தனிமனிதன் ஏற்படுத்தும் உணவுக் கழிவுகள் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!
food waste: இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 0.35 கிலோ முதல் 0.6 கிலோ வரை கழிவுகள் உருவாகின்றன எனக் கணக்கிட்டால், ஓராண்டில் ஒரு நபரால் சுமார் 125 கிலோ முதல் 200 கிலோ வரை மொத்த கழிவுகள் உருவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது
இந்தியாவில் ஓராண்டில் தனிநபர் ஏற்படுத்தும் உணவுக் கழிவுகள் எவ்வளவு என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான அந்த அறிக்கையில், உலகில் தனிநபர்களால் ஓராண்டில் ஏற்படுத்தப்படும் உணவுக் கழிவுகள் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு அளவில் உள்ளன என்பதற்கான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி, உலகளவில் சராசரியாக ஒரு நபர் ஆண்டுக்கு 79 கிலோ அளவுக்கு உணவுக் கழிவுகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: தினமும் RO வாட்டர் குடிக்கிறீர்களா..? குடிக்கும்முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!
முதலிடத்தில் ரஷ்யா:
இந்தியாவில் மட்டும் ஒரு நபர் ஓராண்டில் சராசரியாக 55 கிலோ உணவுக் கழிவுகளை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்தக் கணக்கில் சமைத்த உணவு, காய்கறித் தோல்கள் மற்றும் கெட்டுப்போன உணவுகள் போன்றவை அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் குறைந்த அளவில் உணவுக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளில் ரஷ்யா இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவில் ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 33 கிலோ உணவுக் கழிவுகளை மட்டுமே உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக உணவுக் கழிவுகள் உருவாக்கும் நாடுகள்:
இந்தப் பட்டியலில் தனிநபர் அளவில் அதிகமாக உணவுக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளில் மாலத்தீவு முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரு நபர் ஆண்டுக்கு 207 கிலோ உணவுக் கழிவுகளை உருவாக்குகிறார். அதனைத் தொடர்ந்து எகிப்து (163 கிலோ), ஈராக் (143 கிலோ), பாகிஸ்தான் (130 கிலோ), மெக்சிகோ (105 கிலோ), சவுதி அரேபியா (105 கிலோ), ஆஸ்திரேலியா (98 கிலோ), தென் கொரியா (95 கிலோ), பிரேசில் (94 கிலோ) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மற்ற கழிவுகளும் சேர்த்தால்:
ஐ.நா. வெளியிட்டுள்ள இந்தப் புள்ளி விவரங்களில் உணவுக் கழிவுகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதனுடன் காகிதம், பிளாஸ்டிக், துணிகள் மற்றும் பிற கழிவுகளையும் சேர்த்தால், மொத்த கழிவு அளவு மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: விசேஷ நாட்களில் ஸ்வீட் விருந்து.. சூப்பரான பீட்ரூட் ஹல்வா செய்முறை!
ஒரு நபரால் 125 கிலோ கழிவுகள் உருவாகலாம்:
இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 0.35 கிலோ முதல் 0.6 கிலோ வரை கழிவுகள் உருவாகின்றன எனக் கணக்கிட்டால், ஓராண்டில் ஒரு நபரால் சுமார் 125 கிலோ முதல் 200 கிலோ வரை மொத்த கழிவுகள் உருவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலாக, பழைய செல்போன்கள், வயர்கள் மற்றும் பிற மின்னணு பொருட்கள் காரணமாக ஆண்டுக்கு ஒரு நபர் சுமார் 2 கிலோ அளவுக்கு மின் கழிவுகளையும் உருவாக்குகிறார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவுக் கழிவுகளாக இருந்தாலும், மின்னணு கழிவுகளாக இருந்தாலும், அவற்றை முறையாக மறுசுழற்சி செய்தால் சுற்றுச்சூழலுக்கும் மனித குலத்துக்கும் பெரும் பயன் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.