Viral video: ஓடும் ரயிலில் மின்சார கெட்டிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்.. பாயும் நடவடிக்கை!!
ரயிலில் மின்சார கெட்டிலில் நூடுல்ஸ் சமைத்த பெண், அதற்கு முன்பு 15 பேருக்கு டீ போட்டதாகவும் கூறுகிறார். ரயில் சாக்கெட்டில் மொபைல் சார்ஜர் பயன்படுத்தும் அளவு குறைந்த மின்திறன் கொண்டவை ஆகும். அதில், அதிக மின்திறன் தேவைப்படும் பொருட்களை பயன்படுத்துவதால், தீ விபத்து ஏற்படலாம்.
ரயில் பயணத்தின் போது பெண் ஒருவர் மின்சார கெட்டிலில் மேகி நூடுல்ஸ் சமைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. பொதுவாகவே, நீண்ட தூர பயணத்திற்கு ரயில் வழி போக்குவரத்து மிகவும் சௌகரியமானதாக இருந்து வருகிறது. பெரும்பாலானோருக்கு ரயிலில் பயணிப்பது என்பது பிடித்தமான விஷயமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக நண்பர்கள், குடும்பத்தினருடன் செல்வதற்கு பாதுகாப்பானதாகவும், பயணத்தின் போது உடன் வருபவர்களுடன் ஓர் நெருக்கமான உணர்வையும் அந்த ரயில் பயணம் ஏற்படுத்திவிடும். இப்படி, பாதுகாப்பானதாக நாம் நினைக்கும் பயணமே சிலர் செய்யும் தவறுகளால் ஆபத்தாகவும் முடியலாம். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க : திடீரென அதிர்ந்த பூமி.. கொல்கத்தாவில் நிலநடுக்கம்.. விவரம்!
ரயிலில் நூடுல்ஸ் சமைக்கும் பெண்ணின் வைரல் வீடியோ:
Is this train travel hack to cook food in train is okay?
Is this legal? pic.twitter.com/tuxj9qsoHv— Woke Eminent (@WokePandemic) November 20, 2025
இதுதொடர்பாக வைரலான அந்த வீடியோவில், அந்த பெண் ரயிலில் இருக்கும் சாக்கெட்டில் மின்சார கெட்டிலை இணைத்து மேகி நூடுல்ஸ் மற்றும் பிற உணவுகளை சமைத்துக் கொண்டிருக்கிறார். மராத்தியில் பேசும் அவர், கெட்டிலில் வேகும் மேகியையும் அருகில் வைக்கப்பட்டிருந்த டீயையும் காட்டி, பக்கத்தில் இருந்த சக பயணிக்கும் “ரெடிமேட் காலை உணவை” பரிமாரியதாக கூறுகிறார்.
நூடுல்ஸ்க்கு முன் 15 பேருக்கு டீ:
“எனக்கு எங்கும் விடுமுறை கிடைக்காது; என் சமையல் அறை இங்கும் வேலை செய்கிறது,” என வீடியோவில் நகைச்சுவையாக அப்பெண் கூறுகிறார். மேலும், மேகி நூடுல்ஸ் சமைப்பதற்கு முன்பு அதே மின்சார கெட்டிலில் சுமார் 15 பேருக்கு டீயும் செய்ததாக அவர் கூறுகிறார். அந்த பெண் எந்த ரயிலில் பயணம் செய்தார் என்பது தெரியவில்லை. இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பயணிகள் உயிருக்கு ஆபத்தான செயலாக இது இருப்பதாகவும், ரயிலில் உள்ள மின்சார சாக்கெட்டுகள் குறைந்த மின்திறன் கொண்ட சாதனங்களுக்காக மட்டுமே எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரயில்களில் மின்சார கெட்டில்கள் பயன்படுத்த தடை:
இந்த சம்பவம் மத்திய ரயில்வே கவனித்திற்கு செல்லவே, ரயில்களில் மின்சார கெட்டில்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், இது மிக மிக ஆபத்தான செயல் எனவும் எச்சரித்துள்ளது. “சம்பந்தப்பட்ட சேனலுக்கும், அந்த நபருக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. மகளுக்கும் கத்தி குத்து!
தீ விபத்து ஏற்படலாம்:
ரயில் பயணத்தின் போது இப்படியான சாதனங்களை பயன்படுத்துவது தீ விபத்தை ஏற்படுத்தலாம் என்றும், ரயிலின் மின் அமைப்பை செயலிழக்கச் செய்யலாம் எனவும் ரெயில்வே குறிப்பிட்டுள்ளது. அதோடு, இது தீ பற்றி எரியும் அபாயத்தை ஏற்படுத்தும். மேலும் மின்சாரம் தடைபடும் வாய்ப்பு, ஏசி மற்றும் பிற மின் வசதிகள் செயலிழக்கும் அபாயமும் உள்ளது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகள் ரயிலில் மின்கெட்டில் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும், இப்படியான சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாக ரெயில்வே அதிகாரிகளிடம் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
சட்டப்படி நடவடிக்கை:
இவ்வாறு எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருள்களுடன் பயணிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதன் மூலம் வைரலான வீடியோவில் உள்ள இந்த பெண் மீதும், சட்டநடவடிக்கை பாய உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவருக்கு அபராதமோ, சிறை தண்டனையோ வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.