பட்ஜெட் 2026: பிப்ரவரி 1 முதல் ஸ்மார்ட்போன் விலைகள் உயருமா? தொழில் நிபுணர்கள் கூறுவது என்ன?
Union Budget 2026: தொழில் நிபுணர்களின் கூற்றுப்படி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான உலகளாவிய தேவை அதிகரித்ததன் காரணமாக நினைவகச் சிப்கள் போன்ற முக்கிய கூறுகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய வழங்கல் சங்கிலிகளில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களின் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளன.

கோப்பு புகைப்படம்
பட்ஜெட், ஜனவரி 22, 2026: மத்திய பட்ஜெட் நெருங்கி வரும் நிலையில், ஸ்மார்ட்போன் விலைகள் உயருமா அல்லது குறையுமா என்ற கேள்வி நுகர்வோர்களையும் தொழில் துறையினரையும் கவலைக்குள்ளாக்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டைப் போலவே, இந்த பட்ஜெட்டும் சில தளர்வுகளை வழங்கி அன்றாட பயன்பாட்டு பொருட்களை மலிவாக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இன்று ஸ்மார்ட்போன் என்பது ஆடம்பரப் பொருள் அல்ல; அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளதால், இந்த விவாதத்தின் மையமாக அது விளங்குகிறது.
கடந்த ஆண்டு, பல இந்திய நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் காலடி எடுத்து வைத்தன. இதனால் சீன நிறுவனங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டது. சீன நிறுவனங்கள் பெரும்பாலும் விலைகளை நிலையாக வைத்திருந்த நிலையில், ஆண்டின் இறுதிப் பகுதியில் சில மாடல்களின் விலையை சாம்சங் உயர்த்தியது. இதன் காரணமாக, வரவிருக்கும் பட்ஜெட் மேலும் விலை உயர்வுகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலை குறித்து தொழில் நிபுணர்கள் என்ன கூறுகின்றனர் என்பதை பார்க்கலாம்.
தொழில் நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?
தொழில் நிபுணர்களின் கூற்றுப்படி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான உலகளாவிய தேவை அதிகரித்ததன் காரணமாக நினைவகச் சிப்கள் போன்ற முக்கிய கூறுகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய வழங்கல் சங்கிலிகளில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களின் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளன. விலையை உயர்த்தாமல் இந்தச் செலவுகளை நிறுவனங்கள் தாங்கிக் கொள்வது கடினமாகியுள்ளது.
அதே நேரத்தில், ஸ்மார்ட்போன்களை பொதுமக்களுக்கு எட்டாத விலைக்கு மாற்ற நிறுவனங்கள் தயங்குகின்றன. காரணம், விலை உயர்வு சந்தை சமநிலையை பாதித்து, தேவையில் குறைவு ஏற்படுத்தக்கூடும்.
ரியல்மே நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், தற்போது AI+ Smartphones நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், Nxtquantum Shift Technologies நிறுவனத்தின் நிறுவுநருமான மாதவ் சேத் கூறுகையில், “இந்தியாவின் தொழில்நுட்பத் துறை ஒரு முக்கிய திருப்புமுனையில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு இணைக்கப்பட்ட சாதனங்களின் தேவையால், வெறும் அசம்பிளி மட்டுமல்லாது அதற்கு அப்பாற்பட்ட வளர்ச்சி ஏற்பட வேண்டும். இதுவே கைபேசிகளின் விலையை ஏற்கனவே உயர்த்தியுள்ளது. மத்திய பட்ஜெட், அசம்பிளி மையமான வளர்ச்சியை விட, ஆழமான மதிப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பட்ஜெட் 2026: PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் மாற்றம்.. உதவித்தொகை ரூ.11,800 ஆக உயர்வு?”
மைய உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டிய அவசியம்:
ஸ்மார்ட்போன்களின் முக்கிய கூறுகளான கேமரா மாட்யூல்கள், பேட்டரிகள், பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் (PCBs) மற்றும் பிற அவசியமான பாகங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் மதிப்பு சங்கிலியில் இந்தியா மேல்நிலைக்கு செல்ல வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதேபோல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சிஸ்டம் வடிவமைப்பு, மென்பொருள் சார்ந்த புதுமைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க: பட்ஜெட் 2026: எப்போது தாக்கல் செய்யப்படும்? பொருளாதார ஆய்வு அட்டவணை.. எப்படி நேரலையில் பார்ப்பது? முழு விவரம் இதோ..
தற்போது, பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அசம்பிள் செய்யப்படுகின்றன. ஆனால் முக்கிய கூறுகள் இன்னும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. பட்ஜெட்டில் வழங்கப்படும் குறித்த வரிச்சலுகைகள் மற்றும் கொள்கை ஆதரவுகள், இந்த கூறுகளை நாட்டிற்குள் உற்பத்தி செய்ய நிறுவனங்களை ஊக்குவிக்கக்கூடும் என தொழில் துறையினர் கூறுகின்றனர்.
இத்தகைய நடவடிக்கைகள், உற்பத்திச் செலவுகளை கட்டுப்படுத்தி, ஸ்மார்ட்போன் விலைகளை நிலைநிறுத்தவும், சில சந்தர்ப்பங்களில் விலை குறைவுக்கும் வழிவகுக்கலாம்.
மொத்தத்தில், உலகளாவிய வழங்கல் அழுத்தங்கள் காரணமாக உடனடி மற்றும் பெரிய அளவிலான விலை குறைப்புகள் சாத்தியமில்லை என்றாலும், மத்திய பட்ஜெட் எடுக்கும் திசை, நீண்டகாலத்தில் ஸ்மார்ட்போன்கள் விலை உயருமா அல்லது பொதுமக்களுக்கு மேலும் எட்டக்கூடியதாக மாறுமா என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.