உல்ஃபா அமைப்பின் முகாம்கள் மீது ட்ரோன் தாக்குதல்? ராணுவம் சொன்ன முக்கிய விஷயம்
ULFA Drone Attack : மியான்மர் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தடை செய்யப்பட்ட உல்ஃபா அமைப்பு கூறியுள்ளது. இந்த தாக்குதலில் தங்கள் அமைப்பின் மூத்த தலைவர் கொலை செய்யப்பட்டதாகவும், 19 பேர் காயம் அடைந்ததாகவும் உல்ஃபா அமைப்பு கூறியது. ஆனால், இதற்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மாதிரிப்படம்
டெல்லி, ஜூலை 13 : மியான்மர் எல்லையில் உள்ள தடை செய்யப்பட்ட உல்ஃபா அமைப்பின் (ULFA) முகாம்கள் மீது இந்தியா ராணுவம் (Indian Army) ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்திய ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் உல்ஃபா அமைப்பின் மூத்த தலைவர் கொல்லப்பட்டதாகவும், 19 பேர் காயம் அடைந்துள்ளதாக அந்த அமைப்வு கூறி இருந்தது. ஆனால், இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய ராணுவத்தால் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது. உல்ஃபா அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, 2025 ஜூலை 13ஆம் தேதியான இன்று காலை மியான்மர் எல்லையில் உள்ள உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. உல்ஃபா அமைப்பு அதிகம் பயன்படுத்தும முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல்களில் தடைசெய்யப்பட்ட உல்ஃபா அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 19 பேர் காயமடைந்ததாகவும் அந்த அமைப்பு கூறியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உல்ஃபா அமைப்பு வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய ராணுவம் பதிலளித்துள்ளது. அதன்படி, இது குறித்து பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”இதுபோன்ற சம்பவம் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்திய இராணுவத்தால் இதுபோன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை” என கூறியுள்ளார்.
Also Read : ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – லெப்டினென்ட் ஜென்ரல் ராகுல் ஆர் சிங் பகீர் தகவல்..
இதுகுறித்து முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், “உல்ஃபா வெளியிட்ட அறிக்கை குறித்து தனக்கு தெரியும். அசாம் காவல்துறை இதில் ஈடுபடவில்லை. அஸ்ஸாம் மண்ணில் இருந்து எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. இதுபோன்ற சம்பவங்களுக்குப் பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கமாக ஒரு அறிக்கையை வெளியிடுவார்கள். அவர்கள் இன்னும் எதையும் வெளியிடவில்லை. மாலைக்குள் எங்களுக்கு ஓரளவு தெளிவு கிடைக்கும் என்று நினைக்கிறேன்” என கூறினார்.
உல்ஃபா அமைப்பு
அஸ்ஸாமில் செயல்படும் ஒரு பெரிய பயங்கரவாத அமைப்பு உல்ஃபா. யுனைடெட் லிபரேஷன் ஃப்ரண்ட் ஆஃப் அஸ்ஸாம் என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு 1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அஸ்ஸாமை ஒரு தன்னாட்சி மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக மாற்றுவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
1990 ஆம் ஆண்டு மத்திய அரசு உல்ஃபா அமைப்பை தடை செய்தது. அமைப்பு தொடக்கப்பட்ட காலத்தில், ஏழை மக்களுக்கு உதவி செய்யும் குழுவாக இருந்த உல்ஃபா அமைப்பு, அதன்பிறகு, இந்திய ராணுவத்திற்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது.
Also Read : ரூ. 1.05 லட்சம் கோடி மதிப்புள்ள 10 இராணுவ கொள்முதல் திட்டம்.. மத்திய அரசு ஒப்புதல்..!
குறிப்பாக, அசாம் மாநிலத்தில் தேயிலை தோட்ட உரிமையாளரை படுகொலை செய்ததை அடுத்து, உல்ஃபா அமைப்பு தடை செய்யப்பட்டது. 2008 ஆம் ஆண்டு, உல்ஃபா தலைவர் அரபிந்தா ராஜ்கோவா வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து, உல்ஃபா அமைப்பை மத்திய அரசு தடை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.