தெலங்கானா தொழிற்சாலை விபத்து.. 40 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி!
Telangana Chemical Factory Blast Death Toll Rises | தெலங்கானா ரசாயன தொழிற்சாலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

ஐதராபாத், ஜூலை 03 : தெலங்கானா ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் (Telangana Chemical Factory Blast) சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இந்த வெடி விபத்தில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், அந்த நிறுவனம் நேற்று (ஜூலை 02, 2025) வெளியிட்டுள்ள தகவலில் பலி எண்ணிக்கை 40 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வெடி விபத்து சம்பவத்தில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை உயர்ந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த வெடி விபத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரசாயனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து
தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டத்தில் உள்ள பஷ்யல்ராம் பகுதியில் மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்களை தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த நிலையில் ஜூன் 30, 2025 அன்று தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அதாவது, மருந்து தயாரிப்பதற்கான ரசாயன கலவை இயந்திரத்தில் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில், தொழிற்சாலை முழுவதும் தீ பரவியுள்ளது. இந்த விபத்தில் முதற்கட்டமாக 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
வெடித்து சிதறிய ரசாயன தொழிற்சாலை
Telangana: Reactor blasts at pharma unit in Sanagreddy, several injured
Read @ANI Story | https://t.co/kCeGCWxgtU#Telangana #reactorblast #blast #fire pic.twitter.com/sDVencPJTx
— ANI Digital (@ani_digital) June 30, 2025
பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள்ளாக தீயில் கருகி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த பலர் உயிரிழந்தனர். அதாவது இந்த வெடி விபத்தில் 38 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று (ஜூலை 02, 2025) அறிக்கை ஒன்றை வெளியிட்ட தொழிற்சாலை நிறுவனம், தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது.
இது குறித்து கூறியுள்ள அந்த நிறுவனம், தொழிற்சாலையில் நடந்த விபத்து குறித்த விபரங்களை நாங்கள் மிகுந்த வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறோம். தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர், 33 பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் ஒரு கோடி கருணைத்தொகை வழங்கப்படும். அதே நேரத்தில் காயமடைந்தவர்களுக்கு முழு மருத்துவம் மற்றும் மறுவாழ்வு உதவி கிடைக்கும். ஆலை செயல்பாடுகள் சுமார் 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.