“பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இனி எதிர்காலம் இல்லை!”.. பசுமைப் புரட்சியை நோக்கி நிதின் கட்கரி அதிரடி!!
பசுமை எரிபொருள் மட்டுமல்லாமல், பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பிலும் புதிய கட்டுப்பாடுகளை அமைச்சர் அறிவித்துள்ளார். இனி பேருந்து உற்பத்தியாளர்கள் தாங்களாகவே வாகனங்களுக்குச் சான்றிதழ் அளிக்க முடியாது. அனைத்து பேருந்துகளின் பதிவுகளும் 'வாகன்' இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும். மேலும், நேரடி ஆய்வு மற்றும் வீடியோ பதிவுகள் மூலம் ஒப்புதல் பெற்ற பின்னரே வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும்.

நிதின் கட்கரி
இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வாகனத் துறையில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் காலம் முடிவுக்கு வரப்போவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘பஸ்வேர்ல்ட் இந்தியா கான்க்ளேவ் 2025’ நிகழ்வில் பேசிய அவர், வாகன உற்பத்தியாளர்கள் அனைவரும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத மாற்று எரிபொருட்களுக்கு மாற வேண்டியது கட்டாயம் என வலியுறுத்தினார். பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், வாகனத் துறை நிறுவனங்கள் கீழ்க்கண்ட எரிபொருள் முறைகளில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க: தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா? பெட்ரோலியத்துறை அமைச்சகம் விளக்கம்
ஏன் இந்த மாற்றம் அவசியம்?:
அதன்படி, மின்சார வாகனங்கள் (EV), ஹைட்ரஜன் எரிபொருள் (Hydrogen Fuel), உயிரி எரிபொருட்கள் (Biofuels), சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி (CNG & LNG), எத்தனால் மற்றும் ஃபிளெக்ஸ்-ஃபியூயல் (Ethanol & Flex-fuel) இந்த மாற்றத்திற்கு இரண்டு முக்கிய காரணங்களை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் அதிகப்படியான மாசுகளை வெளியேற்றுவதால், இந்தியாவின் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
ஹைட்ரஜன் மற்றும் எத்தனால் மீதான கவனம்:
“ஹைட்ரஜன் தான் எதிர்கால எரிபொருள்” என்று குறிப்பிட்ட கட்கரி, தற்போது இந்தியாவில் 10 முக்கிய வழித்தடங்களில் ஹைட்ரஜன் பேருந்துகள் மற்றும் லாரிகள் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். டாடா மோட்டார்ஸ், வோல்வோ, அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இதில் ஈடுபட்டுள்ளன. விவசாயக் கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால், இந்தியாவின் இறக்குமதி சுமையைக் குறைக்கப் பெரிதும் உதவும். தற்போது பல வாகனங்கள் E20 (20% எத்தனால் கலப்பு) எரிபொருளில் இயங்கி வருவதை அவர் நினைவு கூர்ந்தார்.
புதிய விதிமுறைகள்:
பசுமை எரிபொருள் மட்டுமல்லாமல், பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பிலும் புதிய கட்டுப்பாடுகளை அமைச்சர் அறிவித்துள்ளார். இனி பேருந்து உற்பத்தியாளர்கள் தாங்களாகவே வாகனங்களுக்குச் சான்றிதழ் அளிக்க முடியாது. அனைத்து பேருந்துகளின் பதிவுகளும் ‘வாகன்’ இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும். மேலும், நேரடி ஆய்வு மற்றும் வீடியோ பதிவுகள் மூலம் ஒப்புதல் பெற்ற பின்னரே வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும். பேருந்து தயாரிப்பாளர்கள் செலவைக் குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், தரம், பாதுகாப்பு மற்றும் பயணிகளின் வசதி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க : கோடை விடுமுறை – 18, 262 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம் – ரயில்வே அதிரடி
மின்சார பேருந்துகளுக்கான தேவை:
இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 1.5 லட்சம் மின்சார பேருந்துகளுக்கான தேவை ஏற்படும் என அமைச்சர் கணித்துள்ளார். தற்போது இந்தியாவின் ஆண்டு உற்பத்தித் திறன் சுமார் 70,000 பேருந்துகளாக உள்ள நிலையில், இதனை அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். நிதின் கட்கரியின் இந்த அறிவிப்பு, இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.