தொல்லை கொடுத்த மனைவி.. திருமணமான 5 மாதங்களில் புது மாப்பிள்ளை தற்கொலை!
Newly Married Man Killed Himself | பெங்களூருவை சேர்ந்த ரேவந்த் என்ற நபர். இவருக்கு 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் அந்த நபர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலை செய்துக்கொண்ட நபர்
பெங்களூரு, அக்டோபர் 22 : கர்நாடகா (Karnataka) மாநிலம் பெங்களூருவை (Bengaluru) சேர்ந்தவர் 30 வயதான ரேவந்த்குமார். இவருக்கு 5 மாதங்களுக்கு முன்னர் மல்லிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. பிடதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ரேவந்த் பணியாற்றி வந்த நிலையில், திருமணம் முடிந்து புதுமண தம்பதிகள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், அவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கை அப்படியே தொடரவில்லை. காரணம், திருமணம் முடிந்த சில நாட்களுக்கு பிறகு கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இருவரும் மனமுடைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட புது மாப்பிள்ளை
நேற்று (அக்டோபர் 21, 2025) காலையும் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டில் இருந்து வெளியே சென்ற ரேவந்த், நேராக ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு ரயில் முன்பு பாய்ந்து அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார், ரேவந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : திருமணம் செய்துக்கொள்வதாக கூறி மோசடி.. இளம் பெண்ணிடம் பணம், நகை பறித்த காதலன்!
வீடியோ பதிவு செய்து வைத்துவிட்டு தற்கொலை
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தங்களது முதற்கட்ட விசாரணையை தொடங்கிய நிலையில், அவர்களுக்கு ஒரு வீடியோ கிடைத்துள்ளது. அதாவது ரேவந்த் தான் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார். அதனை அவர் தனது சமூக வளைத்தள பக்கங்களிலும் அவர் பதிவிட்டுள்ளார். அதில் கூறியுள்ள அவர், திருமணத்திற்கு பிறகு எனது மனைவி மல்லிகா அதிக தொல்லை கொடுக்கிறார். எனது இந்த முடிவுக்கு அவரே காரணம். என்னால் உயிர் வாழவே முடியாது. தொல்லையை தாங்கிக்கொள்ள முடியாமல் நான் இந்த முடிவை எடுக்கிறேன் என்று அவர் தனது வீடியோவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு!
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரேவந்தின் மனைவி மல்லிகாவிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளனர். திருமணமான 5 மாதங்களில் மனைவி தொல்லை தாங்க முடியாமல் கணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.