அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் நிலவரம் என்ன? மத்திய அரசு கொடுத்த விளக்கம்!
Covid Cases In India : சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த வாரத்தில், கேரளாவில் 69 பேரும், மகாராஷ்டிராவில் 44 பேரும், தமிழகத்தில் 34 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்
டெல்லி, மே 20 : சிங்கப்பூர், ஹாங்காங்கில் (Covid In Singapore Hongkong) கொரோனா (Covid 19) தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றின் நிலை என்ன என்பது குறித்து மத்திய அரசு முக்கிய தகவலை வெளியிட்டு இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று, உலக நாடுகளை புரட்டி எடுத்தது. இந்தியா உட்பட உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவி, கோடிக்கணக்கான உயிரிழந்தனர். இதனால், ஒட்மொத்த நாடுகளுக்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மேலும், கொரோனா தடுப்பூசி போன்ற நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர், உலக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்ட நிலையில், மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலவரம் என்ன?
அதாவது, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. சிங்கப்பூர், ஹாங்காங்கில் மே மாதத்தில் இருந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் மே மாதத்தில் மட்டும் 14,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினசரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தோராயமாக 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மே 10ஆம் தேதிக்கு பிறகு ஹாங்காங்கில் புதிதாக 1,042 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பு 972ஆக இருந்த நிலையில், தற்போது 1,042 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவல் அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறையும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, இந்தியாவில் தற்போது 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொடுத்த விளக்கம்
கடந்த வாரத்தில், கேரளாவில் 69 பேருக்கும், மகாராஷ்டிராவில் 44 பேருக்கும், தமிழகத்தில் 34 பேருக்குக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகராராஷ்டிராவில் இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே உள்ள உடல்நில பிரச்னைகளால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எனவே, இந்தியாவில் கொரோனா பரவில் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது, இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புகள் லேசானவை, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருப்பினும், காய்ச்சல், சுவாச தொற்று போன்ற நோய்களை கண்காணிக்க வேண்டும் என மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து விழிப்புடனும், முன்னெச்சரிக்கையாகவும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் பெரிய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை, யாரும் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்து இருந்தது. மேலும், தமிழகத்தில் நாளொன்றுக்கு 8 முதல் 10 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்து இருக்கிறது.