பழைய பொருட்களை விற்று ரூ.800 கோடி சம்பாதித்த மத்திய அரசு – சந்திராயன் -3 செலவை விட அதிகம்
Government scrap revenue record : மத்திய அரசின் சுத்தம் செய்யும் முகாம்கள் மூலம் இதுவரை பழைய பொருட்களை விற்றதன் மூலம் இந்த ஆண்டு ரூ.800 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது சந்திராயன் 3 விண்கலம் உருவாக்க தேவைப்படும் பணத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதிரி புகைப்படம்
புதுடெல்லி, நவம்பர் 9: கடந்த அக்டோபர், 2025 மாதம் அரசு அலுவலகங்களில் நடைபெற்ற சுத்தம் செய்யும் சிறப்பு முயற்சியின் மூலம் மத்திய அரசு (Central Government) வெறும் ஒரு மாதத்திலேயே ரூ.800 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது சந்திரயான்–3 விண்கலத்துக்கான திட்டத்தின் செலவான ரூ.615 கோடிக்கும் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் சிறப்பு சுத்தம் செய்யும் முகாம் கடந்த அக்டோபர் 2 முதல் 31, 2025 வரை நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த முகாமின்போது மத்திய அரசு அலுவலகங்களில் பழைய பொருட்கள், பழுதடைந்த உபகரணங்கள் (Scrap), தேவையற்ற கோப்புகள் ஆகியவை அகற்றப்பட்டன. இந்த முயற்சியின் மூலம் மட்டும் ரூ.800 கோடிக்கும் அதிகமான வருவாய் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.
மொத்த வருவாய் ரூ.4,100 கோடி
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் முகாம் மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இதுவரை இந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சுத்தம் செய்யும் முகாம்களின் மூலம் மத்திய அரசு மொத்தம் ரூ.4,100 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதேபோல், இந்த ஆண்டில் மட்டும் 232 லட்சம் சதுர அடி அலுவலக இடம் காலி செய்யப்பட்டது. இதுவே இதுவரை அதிகபட்சமான சாதனையாகும். மேலும், 29 லட்சம் பழைய கோப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவை.. கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..
இந்த திட்டம் பொதுமக்கள் குறை தீர்க்கும் துறைதலைமையில் நடத்தப்பட்டது. மொத்தம் 84 மத்திய அமைச்சர் அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகள் வெளிநாட்டு தூதரகங்களையும் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இந்த மாபெரும் முயற்சியை மத்திய அமைச்சர்கள் மன்சுக் மண்டவியா, கே. ராம் மோகன் நாயுடு, ஜிதேந்திர சிங் ஆகியோர் மேற்பார்வை செய்தனர்.
5 ஆண்டுகளில் பெரிய மாற்றம்
கடந்த 2021 முதல் 2025 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு இதுவரை 5 சிறப்பு சுத்தம் செய்யும் முகாம்களை நடத்தியுள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்களில் சுத்தம், ஒழுங்கு மற்றும் பணிகள் தாமதமாவது பெருமளவில் குறைந்துள்ளது. இந்த திட்டத்தில் 23.62 லட்சம் அரசு அலுவலகங்கள் இணைந்துள்ளன. இதன் மூலம் 928.84 லட்சம் சதுர அடி இடம் காலி செய்யப்பட்டுள்ளது. மேலும் 166.95 லட்சம் பழைய கோப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் பழைய பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ.4,097.24 கோடி மதிப்புள்ள பழைய பொருட்கள் விற்பனை செய்யபட்டு மத்திய அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது.
இதையும் படிக்க : Delhi Air Quality : காற்று மாசு காரணமாக திணறும் டெல்லி.. தீபாவளிக்கு பிந்தைய நிலை என்ன?
இந்த ஆண்டு நடந்த சுத்தம் செய்யும் முகாமில் பல அமைச்சர்கள் நேரடியாக ஈடுபட்டனர். ஒவ்வொரு அமைச்சகமும் தங்களது துறையில் நிலுவையில் உள்ள பொதுமக்கள் புகார்களை குறைக்க நடவடிக்கை எடுத்தது. முகாமின் முன்னேற்றத்தை நேரடியாக கண்காணித்த பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து துறைகளும் உற்சாகமாக பங்கேற்று பணிகளை தாமதமின்றி முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மொத்தத்தில், அரசு அலுவலகங்களில் சுத்தம் செய்யும் முயற்சியின் மூலம் கிடைத்த வருவாய், சந்திரயான்–3 விண்கலத்தை உருவாக்கும் செலவை மிஞ்சியிருப்பது மத்திய அரசின் செயல்திறனுக்கான ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.