100 முறை தோப்புக்கரணம் போட்டதால் பள்ளி மாணவி பலி?.. அதிர்ச்சி சம்பவம்!
13 Years Old Girl Died After Late Punishment | மகாரஷ்டிராவில் 13 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்றுள்ளார். அதற்காக அவர் 100 முறை தோப்புக்கரணம் போட வைக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாதிரி புகைப்படம்
பால்கர், நவம்பர் 16 : மகாராஷ்டிராவில் (Maharashtra) 100 முறை தோப்புக்கரணம் (Sit Ups) போட்டதால் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி 10 நிமிடம் பள்ளிக்கு தாமதமாக வந்ததன் காரணமாக அவர் 100 முறை தோப்புக்கரணம் போட வைக்கப்பட்ட நிலையில், இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், 100 முறை தோப்புக்கரணம் போட்டதால் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
100 முறை தோப்புக்கரணம் போட்டதால் பள்ளி மாணவி பரிதாப பலி
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி அன்ஷிகா கவுடா. இவர் ஸ்ரீ அனுமந்த் வித்யா மந்தீர் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் குழந்தைகள் தினத்தன்று பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்றுள்ளார். அதற்கு தண்டனையாக மாணவி சுமார் 100 முறை தோப்புக்கரணம் போட வைக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு இடுப்பில் மிக கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவி வீட்டுக்குச் சென்ற நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைய தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க : கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து; ஒருவர் பலி..15 பேரின் நிலை என்ன?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி
சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், அவரது பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த மருத்துவமனையில் இருந்து சிறுமி வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அந்த சிறுமி மும்பையில் உள்ள ஜே ஜே மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தபோதே மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க : டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகள் பயன்படுத்திய ‘டெட் டிராப்’ இ-மெயில்.. வெளியான திடுக் தகவல்
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை
பள்ளியில் மாணவிக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு பிறகு அவருக்கு இடுப்பில் மிக கடுமையான வலி ஏற்பட்டது. அவரால் எழுந்து கூட நிற்க முடியவில்லை என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவாகரத்தில் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே மாணவியின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிய வரும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.