காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. 10 வீரர்கள் பலி; 11 பேர் படுகாயம்..
Army vehicle plunges: கரடு முரடான அந்த பாதையில், கனி டாப் என்ற இடத்தை அடைந்தபோது, வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அது சாலையிலிருந்து விலகி, அருகிலிருந்த 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனம் முற்றிலும் சேதமடைந்தது.

10 ராணுவ வீரர்கள் பலி
காஷ்மீர், ஜனவரி 23: ஜம்மு – காஷ்மீரில் ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். காஷ்மீரின் தோடா மாவட்டத்தில், பதர்வா-சம்பா பகுதியை இணைக்கும் 9,000 அடி உயரமுள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு புறக்காவல் நிலையத்தை நோக்கி நேற்று பிற்பகல் ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. குண்டு துளைக்காத அந்த வாகனத்தில் ஓட்டுநர் உட்பட 21 வீரர்கள் பயணம் செய்தனர். அப்போது, கரடு முரடான அந்த பாதையில், கனி டாப் என்ற இடத்தை அடைந்தபோது, வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அது சாலையிலிருந்து விலகி, அருகிலிருந்த 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனம் முற்றிலும் சேதமடைந்தது.
மேலும் படிக்க: குடியரசு தின விழாவில் CRPF ஆண்கள் பிரிவை வழிநடத்தப்போகும் பெண் கமாண்டன்ட்.. யார் இந்த சிம்ரன் பாலா?
10 வீரர்கள் உயிரிழப்பு:
இந்த விபத்தில், வாகனத்தில் பயணித்த வீரர்கள் தூக்கி வீசப்பட்டனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், ராணுவ மீட்பு படையும், காவல்துறையும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டன. அடர் பனி மற்றும் கரடு முரடான பகுதி என்பதால், வீரர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த விபத்தில், நான்கு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 வீரர்கள் காயமடைந்தனர். இவர்களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
மீதமுள்ள 11 பேரில், 10 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். மற்றொருவர் பதர்வா துணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதர்வா கூடுதல் துணை ஆணையர் சுமித் குமார் புடியால் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
பிரதமர் மோடி இரங்கல்:
‘தோடாவில் நடந்த துயரச் சம்பவத்தால்மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். இதில் நமது துணிச்சலான ராணுவ வீரர்கள் சிலரை நாம் இழந்துவிட்டோம். தேசத்துக்கு அவர்கள் ஆற்றிய சேவை என்றென்றும் நினைவுகூரப்படும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன’ என பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் இரங்கல்:
தொடர்ந்து, “தோடாவில் நடந்த துயரமான சாலை விபத்தில் 10 இந்திய ராணுவ வீரர்களை நாம் இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழந்த இரங்கலை தெரிவிப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அதேபோல், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: குற்றவாளி முகம் தெரிந்தாலே அலெர்ட்.. குடியரசு தின பாதுகாப்பில் களமிறங்கும் AI கண்ணாடி!
காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவும் தனது இரங்கலைத் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அவர் வாழ்த்தியதுடன், மீட்புப் பணிகளையும் பாராட்டினார்.