உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பிரச்னையா இருக்கலாம்!
Warning Signs of Liver Damage : கல்லீரல் நம் உடலில் உள்ள மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று. பொதுவாக ஆரம்ப கட்டத்தில் கல்லீரல் பிரச்னைகள் வெளிப்படையாக தெரியாது. பாதிப்பு தீவிர நிலையை அடையும்போது தான் அதன் அறிகுறிகளை நம்மால் உணர முடியும். இந்த நிலையில் கல்லீரல் பிரச்னையை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய அதன் அறிகுறிகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று கல்லீரல். நாம் ஆரோக்கியமாக இயங்க தேவையான நூற்றுக்கணக்கான செயல்பாடுகளை கல்லீரல் (Liver) செய்கிறது. அவை உடலின் பிற பாகங்களுக்குத் தேவையான ஹார்மோன்கள் மற்றும் புரதங்களையும் (Protein) உற்பத்தி செய்கின்றன. கல்லீரல் உடலில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்துகிறது, உடலில் இரத்த அளவை ஒழுங்குபடுத்துகிறது, மேலும் உடலுக்குத் தேவையான புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை வழங்குகிறது. ஆனால் சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், உணவுமுறைகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியம் மோசமடைகிறது. அமெரிக்க கல்லீரல் அறக்கட்டளையின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சுமார் 51,642 பெரியவர்கள் கல்லீரல் நோயால் இறந்துள்ளனர். கல்லீரல் ஆரோக்கியம் குறைவதற்கான அறிகுறிகளைப் புறக்கணிப்பதும் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஒரு காரணியாகும்.
மஞ்சள் காமாலை
கல்லீரல் செயலிழப்பு தோல் மற்றும் கண்களின் மஞ்சள் நிறத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், கல்லீரல் இரத்த சிவப்பணுக்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் நிறமியான பிலிரூபினைச் செயலாக்கி, பித்தமாக வெளியேற்றுகிறது. ஆனால் கல்லீரல் சரியாக செயல்படாதபோது, நிறமியைச் செயலாக்க முடியாமல் போகும். இது தோல் மற்றும் கண்ணின் நிறத்தில் மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
வயிற்று வலி மற்றும் வீக்கம்
உங்கள் வயிற்றின் மேல் வலது பக்கத்தில் அவ்வப்போது வலி ஏற்பட்டால், அது உங்கள் கல்லீரல் சரியாக செயல்படாததன் காரணமாக இருக்கலாம். கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பு, வயிற்றில் வீக்கம் ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது. இதனால் நீங்கள் நடக்கும்போதும் சுவாசிக்கும்போதும் கடுமையான வலியை ஏற்படுத்தும்.
சிறுநீரின் நிறம் மாறுதல்
கல்லீரல் பிரச்சனைகளின் மற்றொரு அறிகுறி சிறுநீரின் நிறம் மாறுவது. கல்லீரலில் பிலிரூபின் அதிகரிக்கும்போது, பழுப்பு, ஆரஞ்சு போன்ற அடர் நிறங்களில் சிறுநீர் வெளியேற்றப்படலாம். கூடுதலாக, கல்லீரல் சரியாக செயல்படாதபோது, உங்கள் குடல் இயக்கங்களிலும் மாற்றங்களைக் காணலாம்.
சோர்வு மற்றும் பலவீனம்
கல்லீரலில் பிரச்னை இருக்கும்போது இரத்தத்தில் இருந்து நச்சுகளை வடிகட்ட முடியாது. இது வழக்கத்தை விட அதிக சோர்வையும் எரிச்சலையும் உணர வைக்கும். இந்த நிலை மூளை செயல்பாடுகளையும் பாதிக்கிறது. இதன் காரணமாக தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படலாம். உங்கள் உடலில் பலவீனமாக உணரலாம். அதே போல உங்கள் பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படலாம்.
இதயத்துக்கு அடுத்து கல்லீரல் நம் உடலில் மிக முக்கிய உறுப்பு. பொதுவாக கல்லீரலில் ஏற்படும் பிரச்னைகள் ஆரம்பகட்டத்தில் வெளிப்படையாக தெரியாது. பாதிப்பு அதிகரிக்கும்போதுதான் அதன் விளைவுகள் குறித்து நமக்கு தெரியவரும். எனவே கல்லீரல் பிரச்னைகளின் சிறிய அறிகுறிகளையும் நாம் அறிந்து வைத்திருத்தல் அவசியம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)