கோடை வெப்பத்தில் கர்ப்பிணி, குழந்தைகளை ஏன் பாதுகாப்பு அவசியம்..?

Pregnant Women and Children: கோடை வெப்பம் அதிகரிப்பால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு, சோர்வு, தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. கர்ப்பிணிகள் தினமும் 2–3 லிட்டர் தண்ணீர் குடித்து, நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். வெயில் நேரங்களில் வெளியே செல்லுதல் தவிர்த்து, காற்றோட்டமான இடங்களில் இருப்பது அவசியம்.

கோடை வெப்பத்தில் கர்ப்பிணி, குழந்தைகளை ஏன் பாதுகாப்பு அவசியம்..?

கோடை வெப்பம்

Published: 

31 Mar 2026 09:00 AM

 IST

சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். கோடை வெப்பம் காரணமாக அதிக வியர்வை, உடலில் உப்பு சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை, அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. கோடை காலங்களில் கர்ப்பிணி தாய்மார்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் சவால்கள்

கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு பொதுவாகவே வாந்தி மயக்கம் இருக்கும். மழைக்காலங்களில் வாந்தி இருந்தாலும் உடலில் உள்ள நீர்ச்சத்தை கொண்டு தேகம் அதனை சமன்படுத்திக் கொள்ளும். ஆனால், கோடை காலங்களில் வியர்வை மூலம் நீர்ச்சத்து அதிகம் வெளியேறினால் சோர்வு ஏற்படுவதுடன் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

நீர்ச்சத்து உணவுகளின் முக்கியத்துவம்

எனவே, அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் கோடை காலங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளுக்கு கர்ப்பிணி பெண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவர் ஆலோசனை மற்றும் எச்சரிக்கை

இந்த சூழலில் கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகள் கோடையை சமாளிப்பது எப்படி என்பது குறித்து மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவர், குழந்தைகள் மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பரிமளா பிரபாகரன் தெரிவித்ததாவது: கர்ப்பிணி தாய்மார்களுக்கு வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு அதிகம் ஏற்படும். இதனால், கர்ப்பப்பையில் உள்ள நீரின் அளவு குறையவும், சிறுநீர் தொற்று, தண்ணீர் குறைவால் சோர்வு போன்றவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குழந்தை வளர்ச்சி மற்றும் தொற்று அபாயம்

கர்ப்பிணி தாய்மார்கள் வெயில் நேரத்தில் மிகவும் சோர்ந்து காணப்படுவார்கள். இந்த காலங்களில் அவர்களுக்கு அம்மை போன்ற தொற்று நோய்கள் அதிகம் ஏற்படுவதோடு குழந்தையின் வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த நிலைமைகளை கவனமாக கண்காணிப்பது அவசியமாகிறது.

உணவு மற்றும் நீர் பருகும் வழிகாட்டுதல்

வெயில் காலங்களில் கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை நேரடியாகவோ அல்லது ஜூஸ் செய்தோ சாப்பிடுவது நல்லது.

வெப்ப பக்கவாதம் தடுப்பு நடவடிக்கைகள்

முக்கியமாக கோடை காலங்களில் வெப்ப பக்கவாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) வர அதிகம் வாய்ப்பு உள்ளது. வெயில் நேரத்தில் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியில் அலைவதை தவிர்க்க வேண்டும். காற்றோட்டம் உள்ள பகுதிகளில் வசிப்பது மிகவும் நல்லது.

குழந்தைகள் சுகாதார பாதுகாப்பு

குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் அம்மை, வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகளுக்கு இந்த தொற்றுகள் வராமல் சுகாதாரமான சூழலில் வளர்ப்பது அவசியம். குழந்தைகளுக்கு நோய் தொற்று வராமல் இருக்க சிறு சிறு உடல்நல பிரச்சனைகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று தக்க சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்.

குழந்தைகள் உணவு பராமரிப்பு

ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் வீடுகளில் சமைக்கும் இட்லி, இடியாப்பம், நன்றாக வேகவைத்த சாதத்தில் உருளைக்கிழங்கு, நெய் போன்றவற்றை பிசைந்து கொடுப்பது நல்லது. ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர், ஜூஸ் போன்றவற்றையும் அளிக்க வேண்டும்.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..