முடி உதிர்வு பிரச்னைக்கு தீர்வாகும் திராட்சை விதை எண்ணெய்?
Benefits of Using Grapeseed Oil : திராட்சை விதை எண்ணெய் முடிக்கு பளபளப்பை தருவதுடன், மென்மை மற்றும் ஆரோக்கியத்தை தருகிறது மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். திராட்சை விதை எண்ணெய் முடி வேர்களுக்குள் ஆழமாக ஊடுருவி ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் கொண்டது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முடி உதிர்வது (Hair Fall) மற்றும் இள நரை (Grey Hair) ஆகியவை சமீப காலமாக இளைஞர்கள் அதிகம் சந்தித்து வரும் பிரச்னைகளாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் மாறி வரும் உணவு பழக்கம் போன்றவை கூறப்பட்டாலும் அதற்கு தீர்வு மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை. மருத்து சிகிச்சைகள் பெரும்பாலும் கைகொடுப்பதில்லை. நம் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். ஆனால் பெரும்பாலும் அவற்றில் எது சரியான முறை என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், திராட்சை விதை எண்ணெய் முடி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
முடியின் ஆரோக்கியத்திற்கு திராட்சை விதை எண்ணெய்?
திராட்சை விதை எண்ணெய் முடிக்கு பளபளப்பு, மென்மை மற்றும் ஆரோக்கியத்தை தருகிறது என்று கல்யாணி தேஷ்முக் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். காற்று மாசுபாட்டால் நமது முடியை ஈரப்பதத்தை இழந்து மிகவும் வறட்சியாக மாறுகிறது. திராட்சை விதை எண்ணெய் முடியின் வேர்களுக்குள் ஆழமாக ஊடுருவி ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் கொண்டது என்று அவர் சொல்கிறார்.
திராட்சை விதை எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவற்றில் லினோலிக் என்ற அமிலமும் முடியை வேர் வரை சென்று வலுப்படுத்தவும், முடி உதிர்தல் மற்றும் உடைதல் பிரச்னைகளைத் தடுக்கவும் உதவுகிறது. திராட்சை விதை எண்ணெய் வறட்சியைப் போக்கி அரிப்பு போன்ற பிரச்னைகளை சரி செய்கிறது என மருத்துவர் கல்யாணி தெரிவிக்கிறார். மேலும், இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
திராட்சை விதை எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இவை முடியை வலுப்படுத்தவும் அதன் பளபளப்பை அதிகரிக்கவும் உதவும். இருப்பினும், கடுமையாக வறண்ட அல்லது கரடுமுரடான முடி கொண்டவர்களுக்கு திராட்சை விதை எண்ணெய் பயனுள்ளதாக இருக்காது என்றும் மருத்துவர் கூறுகிறார். இந்த எண்ணெய் பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
சரும பிரச்னைகளுக்கு தீர்வு
திராட்சை விதை எண்ணெய் முடிக்கும் மட்டுமல்லாமல் சரும பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைவதாக கூறப்படுகிறது. இதில் அதிக அளவில் ஓமேகா-6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் லினோலிக் அமிலம் (Linoleic Acid) போன்ற சத்துகள் இருப்பதால், இது பலவிதமான சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வாக விளங்குகிறது.
திராட்சை விதை எண்ணெய், அதன் தனித்துவமான ஆண்டி-இன்ஃபிளமேட்ரி (anti-inflammatory) மற்றும் ஆண்டி ஆக்ஸிடென்ட் (antioxidant) குணங்கள் காரணமாக, சருமத்தில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் பாதிப்புகளை வேகமாகக் குணமாக்க உதவுகிறது. சருமத்தில் பருக்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று பாக்டீரியா. திராட்சை விதை எண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம், பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி பருக்களைத் தடுக்கும்.