வெயில் காலத்தில் வயிற்றுப்போக்கு: மருத்துவர்கள் வழங்கும் முக்கிய ஆலோசனை
Summer Loose Motion: வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பதும், செரிமானத்திற்கு ஏற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதும் மிகவும் முக்கியம். சரியான உணவு முறையை பின்பற்றுவதுடன், தேவையான சமயத்தில் மருத்துவர் ஆலோசனை பெறுவது நீண்டகால சிக்கல்களைத் தவிர்க்கவும் உடல் நலத்தை பாதுகாக்கவும் உதவும்.

வெயில் காலத்தில் வயிற்றுப்போக்கு
வெயில் காலத்தில் வயிற்றுப்போக்கு (Loose Motion) என்பது பெரும்பாலும் வைரஸ் தொற்று, செரிமான கோளாறு, மாசுபட்ட உணவு அல்லது குடல் சமநிலையின்மை போன்ற காரணங்களால் ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக கோடை காலத்தில் உணவு விரைவாக கெடுதல், சுத்தமற்ற நீர் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை அதிகரிக்கிறது. பல நேரங்களில் இது சில நாட்களில் தானாகவே சரியாகிவிடும். இருப்பினும், உடலில் நீரிழிப்பு ஏற்படாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியம். உடல் நீர்ச்சத்து குறைந்தால் பலவீனம், மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் ஆரம்பத்திலேயே கவனம் செலுத்துவது அவசியம்.
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் எடுத்துக்கொள்ள வேண்டிய பானங்கள்
வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயத்தில் செரிமானத்திற்கு எளிதான திரவ உணவுகள் மற்றும் உடலின் நீர்ச்சத்து பாதுகாக்கும் பானங்கள் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். மோர், எலுமிச்சை நீர், தெளிவான காய்கறி சூப், உப்பு சேர்த்த பழைய சாதம் நீர் மற்றும் ORS கரைசல் போன்ற பானங்கள் உடலில் இழக்கும் நீர் மற்றும் எலக்ட்ரோலைட் அளவை மீண்டும் நிரப்ப உதவுகின்றன. இதனால் உடல் விரைவாக மீளக்கூடும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
அதே நேரத்தில் வயிற்றுப்போக்கு இருக்கும் போது சில உணவுகளை தவிர்ப்பது மிகவும் அவசியம். குறிப்பாக பால் தயாரிப்புகள், எண்ணெய் அதிகமாக உள்ள கனமான உணவுகள் மற்றும் சமைக்காத உணவுகள் ஆகியவற்றை உட்கொள்வது செரிமான பிரச்சனையை மேலும் மோசமாக்கலாம். எனவே இவ்வாறான உணவுகளை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆயுர்வேத பார்வையில் வயிற்றுப்போக்கு
ஆயுர்வேத மருத்துவத்தில் வயிற்றுப்போக்கை இரண்டு முக்கிய கட்டங்களாகப் பார்த்து அதற்கேற்ற உணவு மற்றும் பானங்களை பரிந்துரைக்கின்றனர். ஒன்று அமா அவஸ்தா (Ama Avastha), மற்றொன்று பக்குவ அவஸ்தா (Pakwa Avastha). இந்த இரண்டு நிலைகளிலும் உடலின் செரிமான நிலை மாறுபடுவதால் உணவு முறையும் வேறுபடுகிறது என்று மருத்துவர் விளக்குகிறார்.
அமா அவஸ்தா (Ama Avastha)
இது செரிமானம் பலவீனமாக இருக்கும் ஆரம்ப நிலையை குறிக்கிறது. இந்த கட்டத்தில் உடல் தேவையற்ற பொருட்களை வெளியேற்ற முயற்சிக்கும். இச்சமயத்தில் கனமான உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக சிறிது சிறிதாக வெந்நீர் அல்லது மூலிகை நீர் குடிப்பது நல்லது என்று மருத்துவர் கூறுகிறார். இது செரிமானத்திற்கு அழுத்தம் தராமல் உடலை சமநிலைக்கு கொண்டுவர உதவுகிறது.
Also Read: கோடையில் வெப்பப் பக்கவாதம், நீரிழப்பைத் தவிர்க்க வேண்டுமா?
மூலிகை பானத்தின் பயன்
ஆயுர்வேதத்தில் Shadanga Paneeya எனும் மூலிகை பானம் பரிந்துரைக்கப்படுகிறது. இது கோரைக்கிழங்கு, சீந்தில் கொடி, சுக்கு, வெட்டிவேர் போன்ற பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த மூலிகை பானத்தை சிறிது சிறிதாக குடிப்பது வாந்தி உணர்வை குறைக்கவும், உடல் திரவங்களை மெதுவாக உறிஞ்சவும் உதவலாம் என்று மருத்துவர் விளக்குகிறார்.
பக்குவ அவஸ்தா (Pakwa Avastha)
வெயில் காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு அறிகுறிகள் குறைய ஆரம்பிக்கும் போது இந்த நிலை ஏற்படுகிறது. ஆனால் இந்த நேரத்தில் உடலில் பலவீனம் மற்றும் நீர் இழப்பு இன்னும் இருக்கக்கூடும். எனவே இந்த நிலையில் மோர், எலுமிச்சை நீர், காய்கறி சூப், கஞ்சி நீர் மற்றும் ORS போன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது உடலின் சக்தியை மீட்டெடுக்க உதவும்.
குழந்தைகளில் வயிற்றுப்போக்கு
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் நீர் இழப்பை தடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார். சிறுவர்களின் உடலில் நீர் இழப்பு மிகவும் வேகமாக ஏற்படக்கூடும் என்பதால் ஆரம்பத்திலேயே சிகிச்சை நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு ORS கரைசல், எலக்ட்ரோலைட் பானங்கள், மாதுளை ஜூஸ் மற்றும் எளிதில் ஜீரணமாகும் மென்மையான உணவுகளை வழங்கலாம்.
மருத்துவரை அணுக வேண்டிய நேரம்
ஒரு நாளில் 5 முறை விட அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படுவது, குழந்தைகள் மந்தமாக அல்லது மிகவும் சோர்வாக இருப்பது, சிறுநீர் குறைவாக வருவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இந்த அறிகுறிகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.