War 2 Review: மாஸ் ஆக்ஷன் காட்சிகள்.. ரசிகர்களை கவர்ந்ததா வார் 2 படம்?
War 2 Review in Tamil: ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வார் 2 படம் ரிலீசாகியுள்ளது. ரா உளவுப் பணியை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், ஆக்ஷன் காட்சிகள் அற்புதமாக அமைந்துள்ளது. ஹ்ரித்திக் மற்றும் ஜூனியரின் நடிப்பு அசத்தலாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வார் 2 படம்
இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர்., கியாரா அத்வானி, அசுதோஷ் ராணா, திஷிதா சைகல், அனில் கபூர், சோனி ரஸ்தான் மற்றும் பலரின் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி ஆகஸ்ட் 14ம் தேதியான இன்று வெளியாகியுள்ள படம் “வார் 2”. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். வார் 2 படத்தின் திரைக்கதையை ஸ்ரீதர் ராகவன் எழுத, பெஞ்சமின் ஜாஸ்பர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படமானது இந்தியில் YRF ஸ்பை யுனிவர்ஸின் கீழ் உருவாகியுள்ள ஆறாவது பாகமாகும். அதேசமயம் 2019ம் ஆண்டு வெளியான வார் படத்தின் தொடர்ச்சியாகும். இப்படியான நிலையில் வார் 2 படத்தின் விமர்சனத்தை நாம் காணலாம்.
படத்தின் கதை
மேஜர் கபீரான ஹ்ரித்திக்ரோஷன் ஒரு ரா உளவு அதிகாரியாக இருக்கிறார். அவர் மிஷன் ஒன்றில் பங்கேற்கிறார். அதன் முடிவில் தனது இறுதி இலக்காக கர்னல் சுனில் லுத்ராவான அசுதோஷ் ராணாவை கொல்கிறார். அசுதோஷ் ராணா தான் ஹ்ரித்திக்ரோஷனுக்கு ரோல் மாடலாக இருந்தவர். அவர் தான் எல்லாமுமாக திகழ்ந்தார். ஆனால் தேசம் என்று வரும்போது ஹ்ரித்திக் ரோஷனுக்கு அசுதோஷை கொலை செய்வது தவிர வேறு வழியில்லாமல் போகிறது. இப்படியான நிலையில் ஹ்ரித்திக் ரோஷனை பிடிக்க மேஜர் விக்ரம் ஜூனியர் என்டிஆர் வருகிறார். இதற்கிடையில் ரா தலைவர் விக்ராந்த் கல்லான அனில் கபூர் அசுதோஷ் ராணா இடத்திற்கு வருகிறார். அசுதோஷ் ராணா மகள் காவ்யா லுத்ராவான கியாரா அத்வானி மிஷனுக்குள் வருகிறார்.
Also Read: Coolie Movie Review: கூலி படம் எப்படி இருக்கு? லோகேஷ் மந்திரம் பலித்ததா? திரை விமர்சனம் இதோ!
இப்படியான நிலையில் ஹ்ரித்திக் ரோஷனை பிடிக்க போன இடத்தில் அவரது வளர்ப்பு மகளை ஜூனியர் என்.டி.ஆர். காப்பாற்றுகிறார். இதனால் இருவருக்குமிடையே ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. இப்படியான நிலையில் ஹ்ரித்திக் ரோஷனுக்கு ஒரு உதவி செய்யும் இடத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. இதன்மூலம் தன்னை ஏற்கனவே ஹ்ரித்திக் ரோஷன் அறிந்தவர் என்பதை உணர்கிறார். இருவருக்குமிடையே தொடர்பு என்ன, உண்மையில் அசுதோஷ் ராணாவை கொலை செய்ய காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் வார் 2 படம் விடை சொல்கிறது.
நடிப்பு எப்படி?
உளவு அதிகாரி கதைக்கு தன்னை ஹ்ரித்திக் ரோஷன் வடிவமைத்து கொண்டார் என சொல்லலாம். அந்த அளவுக்கு அவரின் கேரக்டர் செதுக்கப்பட்டிருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேசமயம் YRF ஸ்பை யுனிவர்ஸில் எண்ட்ரீ கொடுத்திருக்கும் ஜூனியர் என்டிஆர், தனது சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் என சொல்லலாம். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆரின் திரை பகிர்வு உண்மையில் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என சொல்லலாம்.
Also Read: Coolie Movie : ஆட்டோ முழுவதும் ரஜினிகாந்த்.. திருச்சி ரசிகரின் கொண்டாட்டம்!
வழக்கமான கவர்ச்சி நாயகியாக இல்லாமல் கியாரா அத்வானி தனது கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். திரையில் இரண்டு ஹீரோக்களைக் கையாள்வது எளிதான விஷயம் கிடையாது என்ற நிலையில் அதனை அயன் முகர்ஜி சரியாக செய்திருக்கிறார். சில இடங்களில் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டாலும், படம் வழக்கமான ரா படமாக இருப்பது சிறிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் காட்சிகள் மூலம் குறைகளை சரி செய்து ரசிகர்களை திருப்திப்படுத்த முயற்சித்திருக்கிறார்கள். தியேட்டரில் ஆக்ஷன் படம் பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக வார் 2 படம் காணலாம்.