OTT Movies: டார்க் காமெடி.. ஓடிடியில் பார்க்க சூப்பரான படம்.. மிஸ் பண்ணாதீங்க!
2025-ல் வெளியான 'தி பீனீசியன் ஸ்கீம்' , வெஸ் ஆண்டர்சன் இயக்கத்தில், பெனிசியோ டெல் டோரோ உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள காமெடி கலந்த க்ரைம் திரில்லர் படமாகும். ஆயுத வியாபாரி ஒருவரின் வாழ்க்கையையும், அவரது மகளுடனான உறவையும் மையமாகக் கொண்டது. இது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது.

The Phoenician Scheme படம்
பொதுவாக உலக சினிமாவை எடுத்துக் கொண்டால் துப்பறியும் படங்கள் ஓராண்டில் ஏராளமானவை வருகின்றன. இதில் சில கதைகள் சீரியஸாகவும், சில படங்கள் மிகவும் காமெடியாகவும் கையாளப்பட்டிருக்கும். அந்த வகையில் The Phoenician Scheme படமானது 2025 ஆம் ஆண்டு வெளியான ஒரு க்ரைம் த்ரில்லர் படமாகும். காமெடி கலந்த இந்த படத்தை வெஸ் ஆண்டர்சன் இயக்கியுள்ளார். அவரே ரோமன் கொப்போலாவுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார். இந்த படத்தில் பெனிசியோ டெல் டோரோ, மியா த்ரேப்பிள்டன்,மைக்கேல் செரா,ரிஸ் அகமது, டாம் ஹாங்க்ஸ், பிரையன் க்ரான்ஸ்டன், ரிச்சர்ட் அயோடே, ஜெஃப்ரி ரைட்,ஸ்கார்லெட் ஜோஹன்சன், பெனடிக்ட் கம்பர்பாட்ச், ரூபர்ட் ஃப்ரெண்ட்,ஹோப் டேவிஸ், மைக்கேல் செரா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. The Phoenician Scheme படத்துக்கு புருனோ டெல்போனல் ஒளிப்பதிவு செய்த நிலையில், அலெக்ஸாண்ட்ரே டெஸ்ப்ளாட் இசையமைத்திருந்தார். இந்த படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை நாம் காணலாம்.
படத்தின் கதை
“Never buy good pictures. Buy masterpieces.”
— The Phoenician Scheme (2025), dir. Wes Anderson pic.twitter.com/JzX6XPIvTD
— A Shot. (@ashotmagazine) June 30, 2025
ஆயுத வியாபாரியும் தொழிலதிபருமான அனடோல் “ஸ்சா-ஸ்சா” கோர்டா 1950 ஆம் ஆண்டில் ஒரு கொலை முயற்சியில் இருந்து நூழிலையில் தப்பிக்கிறார். ஒரு சிறிய ஒற்றை எஞ்சின் விமானத்தில் பயணிக்கும்போது குண்டு வெடிப்பு நிகழ்கிறது. மயக்க நிலையில் இருந்து கண் விழிக்கும் அவர் தனக்கு மறுவாழ்வு கிடைத்ததாக எண்ணி மகிழ்ச்சியடைகிறார். அதேசமயம் கொலையாளிகளிடமிருந்து தப்பிக்க முடியாது என்பதை அறிந்த கோர்டா தனது மகளை பார்க்க நினைக்கிறார். அவரோ கத்தோலிக்க கன்னியாஸ்திரியாக இருக்கிறார். நீ இந்த இடத்தை விட்டு வெளியேறி தனது தொழிலை எடுத்துக் கொள்ளும்படி கோர்டா மகளிடம் கேட்கிறார். ஆனால் தனது அம்மாவை அப்பா கொன்று விட்டதாக மகளுக்கு சந்தேகம் இருப்பதால் இருவருக்குள்ளும் விரிசல் உண்டாகிறது.
இதனிடையே உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கோர்டாவின் நெறிமுறையற்ற வணிக நடைமுறைகளை நிறுத்த விரும்பி திட்டம் தீட்டுகிறது. இதனை அறிந்துக் கொண்ட கோர்டா உடனடியாக தன்னுடைய மகள் லீசல் மற்றும் நிர்வாக உதவியாளர் பிஜோர்ன் உடன் இணைந்து தனது முதலீட்டாளர்களைச் சந்தித்து அவர்களை ஏமாற்ற முயற்சி எடுக்கிறார். இந்த திட்டத்தில் அப்பா கோர்டா குறித்து மகள் லீசாவுக்கு பல விஷயங்கள் தெரிய வருகிறது. அது என்ன என்பதே இப்படத்தின் கதையாகும்.
படத்தின் சிறப்புகள்
ஒரு கதையாக படித்தால் என்ன படம் இது என தோன்றலாம். ஆனால் கிட்டதட்ட 1 மணி நேரம் 45 நிமிடங்கள் நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் அளவுக்கு டார்க் காமெடியில் வெளுத்து வாங்கியிருப்பார்கள். தனது மாமனார் லெபனான் பொறியாளர் ஃபௌத் மலூஃப்புக்கு சமர்பிக்கும் வகையில் இப்படத்தை வெஸ் ஆண்டர்சன் இயக்கியிருந்தார். இந்த படம் மிகவும் நுணுக்கத்துடன் சமகாலத்திற்கு ஏற்ப சரியாக எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றது. இந்த படமானது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் கண்டு மகிழுங்கள்.